அரசியல் கட்சிகளிடம் இருந்து நன்கொடை பெறமாட்டேன்: வேட்பாளர் இங்

அரசியல் கட்சிகளிடம் இருந்து நன்கொடை பெறமாட்டேன்: வேட்பாளர் இங்

2 mins read
04d7dc00-9c30-4ab1-9586-47bc532761d2
சொங் பாங் சந்தை, உணவங்காடி நிலையத்தில் சனிக்கிழமை வாக்கு திரட்டிய அதிபர் தேர்தல் வேட்பாளர் இங் கொக் சொங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசியல் கட்சிகளிடம் இருந்து நன்கொடை எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று அதிபர் தேர்தலில் போட்டியிடும் இங் கொக் சொங் தெரிவித்தார்.

தான் எந்தக் கட்சியையும் சாராத அதிபர் தேர்தல் வேட்பாளர் என்பதை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.

மக்களைத் திரட்டி சமூக நற்பயன்களைச் சாதிக்கத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரு இங், 75, சனிக்கிழமை சொங் பாங் சந்தை, உணவு நிலையத்தில் ஊடகத்திடம் பேசினார்.

‘‘உங்கள் அதிபர் சுதந்திரமானவராக இருக்க வேண்டும். சிங்கப்பூரர்களுக்காக அவர் சுதந்திர நிலையில் செயல்பட வேண்டும். அவர் எந்தவோர் அரசியல் கட்சியையும் சார்ந்தவராக இருக்கக் கூடாது,’’ என்று திரு இங் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் இதர வேட்பாளர்களில் திரு தர்மன் சண்முகரத்னம் பல ஆண்டு காலமாக மக்கள் செயல் கட்சியில் இருந்தவர் என்பதையும் மற்றொரு வேட்பாளரான திரு டான் கின் லியான் பல அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று இருக்கிறார் என்பதையும் திரு இங் சுட்டினார்.

ஜிஐசி என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாகச் செயலாற்றி இருக்கும் திரு இங், தொழில்துறை அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகளைப் பெறப்போவதில்லை என்றும் சொந்த சேமிப்பைக் கொண்டு பிரசாரத்திற்குச் செலவிடப்போவதாகவும் தெரிவித்தார்.

வாக்களிப்பு நாளன்று வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் அளவுக்குத் தன்னிடம் போதிய மனிதவள ஆற்றல் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட திரு இங், இருந்தாலும் பலரும் உதவி செய்ய முன்வந்திருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரர்கள் தம்மை அதிபராகத் தேர்ந்தெடுத்தால், அதிபரும் அவருடைய துணைவியாரும் சிங்கப்பூரிலேயே பிறந்தவர்களாக இருக்கக்கூடிய வாய்ப்பை மக்கள் பெறலாம் என்று வெள்ளிக்கிழமை அதிபர் தேர்தல் வேட்பாளரான திரு டான் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கருத்து கேட்டபோது பதில் கூறிய திரு இங், சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீயும் காலமான நிதி அமைச்சர் ஹான் சுவி சென் இருவரும் மலேசியாவில் பிறந்தவர்கள் என்றும் ஆனால், சிங்கப்பூர் தலைவர்களாகப் புகழ் பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

திரு இங்கின் வருங்கால மனைவி திருவாட்டி சிபில் லாவ், 45, கனடாவில் பிறந்தவர். அவர் 18 வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். சிங்கப்பூர் குடிமகளாக ஆனவர்.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அறப்பணித் திட்டம் எதையாவது தொடங்குவீர்களா என்று கேட்டபோது, நிதி வளங்களுடன் கூடிய மக்களைத் திரட்டி தாதிமை இல்லங்களில் உள்ளவர்களுக்கும் குறைந்த வருமானதாரர்களுக்கும் உதவி செய்யலாம் என்று தான் நம்புவதாக திரு இங் கூறினார்.

நிதி அறிவு போன்ற தேர்ச்சிகளை இளம் தலைமுறையினருக்குப் போதிக்க உதவலாம் என்பதும் தமது நம்பிக்கை என்றார்.

குறிப்புச் சொற்கள்