சொந்த ஊரிலிருந்து 1,000 கி.மீ. தூரத்தில் பணிப்பெண்ணைத் தவிக்கவிட்டவருக்கு அபராதம்

சொந்த ஊரிலிருந்து 1,000 கி.மீ. தூரத்தில் பணிப்பெண்ணைத் தவிக்கவிட்டவருக்கு அபராதம்

2 mins read
4d501a74-e5c8-4aac-9fb3-1373461ef5fd
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் ஹோங் ஸுவான்யு இரு குற்றங்களை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உணவுக் கடை உரிமையாளரான ஹோங் ஸுவான்யு, தம் பணிப்பெண்ணை 10 நாள் விடுமுறையாக இந்தோனீசியாவின் சுரபாயாவுக்கு அனுப்பப் போவதாகக் கூறி அவரிடம் பொய்யுரைத்தார்.

2018 ஏப்ரல் 28ஆம் தேதி பணிப்பெண் இஸ்லஹத்துல் அலிஃபுடன் சேர்ந்து ஹோங் பாத்தாம் தீவுக்குச் சென்றார். ஜாவா தீவில் உள்ள சுரபாயாவிலிருந்து 1,300 கி.மீ. முதல் 1,400 கி.மீ. தூரத்தில் இருக்கும் பாத்தாம் தீவில் இஸ்லஹத்துலை ஹோங் கைவிட்டார்.

தமக்குத் தெரியாத பகுதியில் தவிக்கவிடப்பட்டதை உணர்ந்த இஸ்லஹத்துல் மனமுடைந்துப் போனார். தமது கைப்பேசி மின்னூட்டம் செய்யப்படாததால் தம் அன்புக்குரியவர்களை அவரால் தொடர்புகொள்ள இயலவில்லை.

பின்னர் டாக்சி ஓட்டுநர் ஒருவரின் கைப்பேசியை இரவல் பெற்று சிங்கப்பூரில் இருக்கும் தமது பணிப்பெண் முகவரை இஸ்லஹத்துல் தொடர்புகொண்டார். அந்த முகவருடன் வேலை செய்பவரின் நண்பரின் வீடு பாத்தாம் தீவில் உள்ளது. அவருடன் சேர்ந்து இஸ்லஹத்துல் வசிக்க அந்த முகவர் ஏற்பாடு செய்தார்.

2018 மே 2ஆம் தேதி இஸ்லஹத்துல் சிங்கப்பூர் திரும்பினார்.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் இரு குற்றங்களை ஒப்புக்கொண்ட சிங்கப்பூரரான 51 வயது ஹோங்கிற்கு வெள்ளிக்கிழமை $13,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இஸ்லஹத்துலை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லத் தவறியது, செல்லுபடியாகும் உரிமம் இல்லாத பணிப்பெண்ணை உணவுக் கடை உதவியாளராக பணியமர்த்தியது அவ்விரு குற்றங்களாகும்.

2018 பிப்ரவரியில் ஹோங்கிற்காக பணிபுரியத் தொடங்கினார் இஸ்லஹத்துல். ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள தமது மீன் சூப் கடையில் சுமார் மூன்று வாரங்களுக்குக் கிட்டத்தட்ட தினமும் இஸ்லஹத்துலை வேலை செய்ய வைத்தார் ஹோங்.

2018 ஏப்ரல் 28ஆம் தேதி காலை 7.30 மணியளவில், காலை உணவைத் தயார்செய்ய இஸ்லஹத்துல் தவறியதால் அவர்மீது ஹோங் சினமடைந்தார்.

அன்றைய தினம் நண்பகல்வாக்கில், 10 நாள் விடுமுறையாக சுரபாயாவுக்கு அனுப்பப் போவதாக இஸ்லஹத்துலிடம் ஹோங் கூறினார். பாத்தாம் தீவு வழியாக அங்கு பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் ஹோங் சொன்னார்.

மரினா ஸ்குவேரில் உள்ள சிங்கப்பூர் குரூஸ் சென்டருக்கு இருவரும் சென்றனர். அப்போது தம் பணிப்பெண்ணின் வேலை அனுமதியை ரத்து செய்ய தம் நண்பர் ஒருவரிடம் ஹோங் உதவி கோரினார். அன்றைய தினமே இஸ்லஹத்துலின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்