அதிபர் ஆலோசனை மன்றத்தை மதித்து மரியாதை கொடுத்து செயல்படுவேன்: தர்மன்

அதிபர் ஆலோசனை மன்றத்தை மதித்து மரியாதை கொடுத்து செயல்படுவேன்: தர்மன்

3 mins read
c7e6db53-25cb-4749-87f6-d40e6abb7f26
தியோங் பாரு சந்தையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி அதிபர் தேர்தல் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம், அவரின் துணைவியார் ஜேன் இட்டோகி இருவருக்கும் கடைக்காரர் ஒருவர் அன்னாசிப் பழம் கொடுத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிபர் ஆலோசனை மன்றத்தை மதித்து, மரியாதை கொடுத்து தான் செயல்படப்போவதாக அதிபர் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார்.

நிதிச் செலவினம், முக்கியமான நியமனங்கள் தொடர்பில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது அதிபர் அந்த மன்றத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது கட்டாயமானது.

அதிபர் என்பவர் மிக முக்கியமான, பிரத்தியேக, சமயோசித முடிவு அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். இருந்தாலும்கூட, அதிபர் ஆலோசனை மன்றம் என்பது ஒரு முக்கியமான அமைப்பு. அது இந்த வழியில்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திரு தர்மன் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அதிபர் ஆலோசனை மன்றத்துடன் எப்படி செயல்படுவீர்கள், சுதந்திரமான செயல்முறையை எப்படி கட்டிக்காப்பீர்கள் என்று கேட்டதற்கு அளித்த பதிலில் திரு தர்மன் இவ்வாறு தெரிவித்தார்.

தியோங் பாரு சந்தைக்கு வருகை அளித்த திரு தர்மன், 66, “அரசாங்க நிதி அம்சங்கள் தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் ஆட்சி நிர்வாக அதிகாரத்தில் அல்லது வேறு நிலையில் உள்ள யாரும் என்னை முட்டாள் ஆக்கிவிட முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்,” என்றார்.

கடந்த 2007 முதல் 2015 வரை நிதி அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தையும் 2011 முதல் 2019 வரை துணைப் பிரதமராக தான் நியமனம் பெற்றிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சேமிப்பிற்கான இரண்டாவது சாவி அதிபரிடம் இருக்கிறது. கடந்தகால சேமிப்புகளில் கைவைக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் வருடாந்திர செலவினத் திட்டங்கள் கருதப்படும் பட்சத்தில், அந்தத் திட்டங்களை அதிபர் நிராகரிக்க முடியும்.

இருந்தாலும் அப்படி அதிபர் எடுக்கும் நிராகரிப்பு முடிவை அதிபர் ஆலோசனை மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாடாளுமன்றம் ஒரு மசோதா மூலம் அதிபரின் முடிவை ரத்து செய்யலாம்.

இதற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீங்கலாக மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

அதிபர் ஆலோசனை மன்றத்திற்கு அரசாங்கச் சேவை ஆணையத்தின் முன்னாள் தலைவர் எடி டியோ, இப்போது தலைவராக இருக்கிறார்.

அந்த மன்றத்தில் எட்டு உறுப்பினர்களும் இரண்டு மாற்று உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

அந்த எட்டு உறுப்பினர்களில் மூன்று பேரை அதிபர் தனது உசிதப்படி நியமிக்கிறார். மூவரைப் பிரதமர் நியமிக்கிறார்.

தலைமை நீதிபதி, அரசாங்கச் சேவை ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தலா ஒருவரை நியமிக்கிறார்கள்.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களை ஐக்கியப்படுத்தும் ஒரு தலைவர் என்ற முறையில் திரு தர்மன் எப்படி செயல்படுவார் என்பது பற்றியும் அரசியல் வேறுபாடுகளுக்கு இடையே அவருடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திரு தர்மன், வெவ்வேறான கருத்துகள் ஜனநாயகத்தின் அங்கம் என்றார்.

“இயற்கையிலேயே, வேறுபாடுகளைக் களைவதற்கான வழிகளைக் காண விரும்பும் ஒருவராக நான் இருக்கிறேன். இதுவே எனது பாணி.

“சில நேரங்களில் இத்தகைய வேறுபாடுகளை உடனடியாகக் களைந்துவிட முடியாது. இருந்தாலும், நாம் எல்லாரும் ஐக்கியமான சிங்கப்பூரர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் அனைவரும் சிங்கப்பூரின் அங்கம். அதுதான் நம்மை ஐக்கியப்படுத்துகிறது,” என்று திரு தர்மன் கூறினார்.

வேட்பாளர்கள் ஒவ்வொருவர் மீதும், அவர்களுடைய குணநலன்கள் மீதும், எதிர்காலத்திற்கு அவர்களால் என்ன சாதிக்க முடியும் என்பதன் மீதும் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும்படி வாக்காளர்களைத் திரு தர்மன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்