இங் கொக் சொங்: நம்பிக்கையும் நேர்மையும் முக்கியம்

இங் கொக் சொங்: நம்பிக்கையும் நேர்மையும் முக்கியம்

2 mins read
eb8897ab-bda8-4611-b99d-b74faa84fd34
கலந்துரையாடலில் அதிபர் வேட்பாளர் இங் கொக் சொங் (இடது), நெறியாளர் வலிட் ஜும்பிலாட். - படம்: இங் கொக் சொங் ஊடகக் குழு

வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலமும் உளத்தூய்மையுடன் நேர்மையாகக் கடமையாற்றுவேன் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதன் மூலமும் தன்னால் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று அதிபர் தேர்தல் வேட்பாளர் இங் கொக் சொங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“இது நேருக்கு நேரான பேச்சன்று; இது உள்ளத்திற்கும் உள்ளத்திற்குமான பேச்சு,” என்று திரு இங் சொன்னார்.

வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்தவன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை அக்கறையோடு கவனித்துக்கொண்டவன் என்பன போன்ற தமது வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதன்மூலம் எளிய மக்களுடன் தன்னால் தொடர்புகொள்ள முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான திரு இங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகச் சமுதாயம் வெள்ளிக்கிழமை இரவு ‘நம் அதிபர் வேட்பாளர்களைச் சந்திப்போம்’ எனும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமைப்பின் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 200 பேர் அதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி திரு இங்கின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலந்துரையாடலின்போது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு திரு இங் இவ்வாறு பதிலளித்தார்.

நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவுடனான தனிப்பட்ட உரையாடலை திரு இங் பகிர்ந்துகொண்டார்.

1960களிலும் 70களிலும் அரசியல் பேரணிகளில் கலந்துகொண்டோரில் பலருக்கு உலகப் பொருளியல் குறித்த தனது கவலைகள் புரியவில்லை என்று திரு லீ, தம்மிடம் சொன்னதாக திரு இங் கூறினார்.

ஆயினும், மக்களின் நம்பிக்கையைப் பெற்றதால் திரு லீயால் பல தேர்தல்களில் வெல்ல முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

தம்மால் மாண்டரின் மொழியில் சரளமாகப் பேச முடியாதது ஒரு பாதகமான அம்சம் என்பதை திரு இங் ஒத்துக்கொண்டார்.

தம்மால் தியோச்சு மொழியில் பேச முடியும் என்றாலும், சிங்கப்பூரிலுள்ள சீனர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் மட்டுமே தியோச்சு பேசுவோர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“தியோச்சுவிலும் சில சொற்கள் மாண்டரினிலும் பேச முயல்வேன். தேர்தலுக்குப்பின், மாண்டரின் பாடங்களைத் தொடங்க விரும்புகிறேன்,” என்றார் திரு இங்.

என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான் அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்த நிலையிலேயே போட்டி உறுதியாகிவிட்டது. அப்படியிருக்க நீங்கள் ஏன் விலகியிருக்கக்கூடாது என்று ஒருவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு இங், அதிபர் தேர்தலில் போட்டியின்றிப் போய்விடக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, நாட்டின் கையிருப்பு நிதியைக் கையாள்வதில் தனக்கு நிபுணத்துவம் இருப்பதாகத் தான் நம்புவதும் ஒரு காரணம் என்றார்.

குறிப்புச் சொற்கள்