தேர்தல் தொடர்பான மோசடிகளில் சிக்காதீர்; காவல்துறை ஆலோசனை

தேர்தல் தொடர்பான மோசடிகளில் சிக்காதீர்; காவல்துறை ஆலோசனை

2 mins read
f875803d-faa4-4870-9ec9-eb1b91aa90aa
மோசடிப்பேர்வழிகள் அரசாங்க அதிகாரிகளைப் போல அல்லது தேர்தல் வேட்பாளரைப் போல நடித்து ரகசிய தகவல்களை கேட்கக்கூடும் என்று காவல்துறை எச்சரித்து இருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

அதிபர் தேர்தல் தொடர்பான மோசடிகளுக்கு இரையாகிவிடாமல் விழிப்புடன் சிங்கப்பூரர்கள் இருந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

அரசாங்க அதிகாரிகள் போன்று அல்லது தேர்தல் வேட்பாளர்கள் போன்று நடித்து மோசடிக்காரர்கள் வங்கித் தகவல்களை அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கேட்கக்கூடும் என்று காவல்துறை சனிக்கிழமை அறிக்கை ஒன்றில் எச்சரித்தது.

வங்கி ரகசியத் தகவல்களையும் ஒருநேர ரகசிய எண்ணையும் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் வழியாக மோசடிக்காரர்கள் கேட்கக்கூடும் என்றும் காவல்துறை எச்சரித்து உள்ளது.

மோசடிக்காரர்கள் படங்களையும் பயன்படுத்தி ஏமாற்றுவார்கள். எதையும் சரிபார்க்காமல் யாருக்கும் பணத்தை அனுப்பாதீர்கள். வங்கிக் கணக்கு தொடர்பான ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இணையம் வழி நடத்தப்படும் வங்கி கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை அந்தச் செயலியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மோசடி தொடர்பான அறிகுறிகளை, தகவல்களை 1800-722-6688 என்ற மோசடிக்கு எதிரான நேரடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.

மோசடி பற்றி சந்தேகம் ஏற்பட்டால் அது பற்றி அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவித்துவிட வேண்டும் என்பதைக் காவல்துறை நினைவூட்டி இருக்கிறது.

இதனிடையே, இது பற்றி கருத்துக் கூறிய தேர்தல் துறை பேச்சாளர், தேர்தல் துறையைச் சேர்ந்தவை என்று தங்களைக் குறிப்பிட்டுக்கொள்ளும் போலி இணையத் தளங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் துறை இணையத்தளத்தைப் போன்று தோன்றும் தோற்றங்கள் இணையத்தில் புழங்கி வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய போலி தளங்கள் ‘கீழே உள்ள தொடர்புக்குச் சென்று வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயரைப் பதியுங்கள்’ என்று கேட்டுக்கொள்கின்றன.

வாக்காளர்கள் தங்கள் சிங்பாஸ் செயலியைப் பயன்படுத்தி தேர்தல் துறையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ள வாக்காளர் சேவை பக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் இது போன்ற அதிகாரபூர்வ வழிகளில் தொடர்புகொண்டு வாக்களிப்பதற்கான நிலவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்