ஜூரோங் ஹெல்த் நிதியின் ஆதரவால் இயங்கும் சமூக அடிப்படையிலான பராமரிப்பு முறையின்கீழ் 500க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பலனடைந்துள்ளனர்.
புக்கிட் பாத்தோக் தொகுதிக்கும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் இடையிலான பங்காளித்துவ முயற்சியின்கீழ் உருவான புக்கிட் பாத்தோக் குடியிருப்புப் பராமரிப்பு முறை என்று இத்திட்டம் அழைக்கப்படுகிறது.
2019 ஜூன் முதல் இவ்வாண்டு மார்ச் வரை, புக்கிட் பாத்தோக்கில் உள்ள 11 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிக்கும் 22,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் குழு சென்றடைந்தது.
இத்திட்டத்தின்கீழ் சில நடவடிக்கைகள் ஜூரோங்கின் இதர பகுதிகளான பூன் லே, ஹொங் கா, புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் போன்றவற்றுக்கு விரைவில் நீட்டிக்கப்படும்.
பொது மருத்துவர்கள், சமூகப் பங்காளிகள் அடங்கிய குழு சிக்கலான விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கின்றனர்.
இந்தப் பராமரிப்பு முறையால் ஏற்பட்டுள்ள ஆக்ககரமான விளைவுகள் நினைவு நூல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங் டெங் ஃபோங் மருத்துவமனையும் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியும் சனிக்கிழமை ஏற்பாடு செய்த சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் இணை சுகாதார, சமூகச் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் லீ ஹீ ஹூன், இத்திட்டத்தில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு சுகாதாரம் தொடர்பான வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள், குறிப்பாக 60க்கும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் கூறியதைக் சுட்டினார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகளுக்குச் சென்றோர் விகிதமும் சளி, காய்ச்சல் மற்றும் நியூமோகோக்கல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் விகிதமும் 2019க்குப் பிறகு ஏற்றம் கண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவப் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சமூக ஆதரவும் முக்கியம் என்று இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் பராமரிப்பு இணைப்பாளரான கேத்தரின் டான் தெரிவித்தார்.
“வயது முதிர்ந்த குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோருக்கு நாட்பட்ட நோய்கள் உள்ளன. மருத்துவர்கள் அவர்களைக் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்நோக்கும் சமுதாய விவகாரங்கள் அவ்வளவாக மற்றவர்களுக்குத் தெரிய வருவதில்லை,” என்றார் அவர்.