பிரதமர் லீ மூன்று நாள் வியட்னாம் பயணம்

பிரதமர் லீ மூன்று நாள் வியட்னாம் பயணம்

1 mins read
0e3df9e4-22d7-4484-8350-db0dde171f6b
பிப்ரவரி மாதம் சிங்கப்பூர் வந்திருந்த வியட்னாமியப் பிரதமர் ஃபான் மின் சின் இஸ்தானாவில் பிரதமர் லீயைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக வியட்னாம் செல்கிறார்.

வியட்னாம் பிரதமர் ஃபாம் மின் சின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்குச் செல்லும் திரு லீ, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அங்கு இருப்பார்.

வியட்னாமுடனான சிங்கப்பூரின் இருதரப்பு உறவு 50வது ஆண்டை எட்டும் வேளையிலும் சிங்கப்பூர்-வியட்னாமின் உத்திபூர்வப் பங்காளித்துவம் 10வது ஆண்டைத் தொடும் வேளையிலும் திரு லீயின் பயணம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் 2018இல் வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற ஆசியான் தொடர்பான உலகப் பொருளியல் கருத்தரங்கில் பிரதமர் லீ பங்கேற்றார். அதன்பிறகு இப்போதுதான் அவர் அங்கு செல்கிறார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வியட்னாமியப் பிரதமர் சின் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை தந்தார். அதன் அடிப்படையில் திரு லீயின் பயணம் அமைந்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்விரு தலைவர்களும் கடந்த மே மாதம் இந்தோனீசியாவின் லபுவானில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் சந்தித்துக் கொண்டனர்.

வியட்னாமில் இருக்கும்போது திரு லீக்கு, திரு சின் அதிகாரத்துவ இரவு விருந்து அளிப்பார்.

வியட்னாம் - சிங்கப்பூர் தொழிற்பூங்காவில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் இருவரும் பங்கேற்பர். அப்போது, பல்வேறு தொழிற்பேட்டைகளுக்கான நில அகழ்வுச் சடங்கையும் புதியவர்களுக்கு முதலீட்டு உரிமம் வழங்கும் நிகழ்வையும் இரு தலைவர்களும் பார்வையிடுவர்.

இந்த இரு நிகழ்வுகளும் மெய்நிகர் முறையில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்