இவ்வாண்டு அதிபர் தேர்தல் வேட்பாளரான டான் கின் லியானுக்குத் தான் ஆதரவளிப்பதாக திரு டான் செங் போக் அறிவித்துள்ளார். 83 வயது டான் செங் போக்கும் முன்பு அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்.
“தாங்கள் இருவரும் சுயேச்சையாக இயங்கும் அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே கனவைக் கொண்டவர்கள்,” என்று கூறிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவரான டாக்டர் டான் செங் போக், அதனால்தான் திரு டான் கின் லியானுக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னார்.
வாக்காளர்கள் பல்வேறு விவகாரங்களால் திசை திருப்பப்படாமல் தேர்தலின் நோக்கத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று டாக்டர் டான் செங் போக் குறிப்பிட்டார்.
அப்போதுதான் காப்புநிதியைப் பாதுகாத்து தரமானோருக்குக்கீழ் நாடு செயல்படுவதை உறுதிப்படுத்தும் சுயேச்சையாக இயங்கும் ஒருவரை இஸ்தானா அதிபர் மாளிகைக்கு அனுப்ப முடியும் என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் டான் செங் போக் பேசினார்.
அன்றைய தினம் பீப்பள்ஸ் பார்க் உணவு நிலையத்தில் திரு டான் கின் லியான் மேற்கொண்ட பிரசாரச் சுற்றுலாவில் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் டாக்டர் டான் செங் போக் கலந்துகொண்டார். அவரும் திரு டான் கின் லியானும் 2011ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
டாக்டர் டான் செங் போக், திரு டான் கின் லியானுக்கு ஆதரவளிக்கும் இரண்டாவது முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளர். 2011 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மற்றொருவரான திரு டான் ஜீ சேயும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அந்தத் தேர்தலில் 35.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று டாக்டர் டோனி டான் வெற்றி பெற்றார். டாக்டர் டான் செங் போக் 34.85 விழுக்காடு வாக்குகளையும் திரு டான் ஜீ சே 25.04 விழுக்காடு வாக்குகளையும் பெற்றனர். திரு டான் கின் லியான் 4.91 விழுக்காடு வாக்குளைப் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
திரு டான் செங் போக்குடன் மக்கள் குரல் (பீப்பள்ஸ் வாய்ஸ்) கட்சியைத் தொடங்கிய திரு லிம் தியென் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த அதிபர் தேர்தலில் திரு டான் கின் லியானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

