சம்பவ இடத்தில் சந்தேகப்பேர்வழிகள்

சம்பவ இடத்தில் சந்தேகப்பேர்வழிகள்

2 mins read
9a49b8fc-e2f0-46d5-9e91-7346b3f4b8e9
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அஸ்வின் பச்சன் பிள்ளை சுகுமாரனிடம் குற்றம் நிகழ்ந்த விதம் குறித்து நேரடி விசாரணை நடத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்ச்சர்ட் ரோட்டில் நடந்த ரகளையில் 11 பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிதடி சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

சந்தேகிக்கப்படும் 11 பேரையும் அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்றனர்.

அஸ்வின் பச்சன் பிள்ளை சுகுமாரன், 29, என்பவர் அந்த 11 பேரில் ஒருவர்.

முகம்மது இஸ்ராட் முகம்மது இஸ்மாயில் என்பவரை கடந்த வாரத் தொடக்கத்தில் கொலை செய்து இருப்பதாக சுகுமாரன் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

சுகுமாரன் கான்கார்ட் ஹோட்டல், கடைத்தொகுதி கட்டடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு இதர 10 பேரும் ஒருவர் பின் ஒருவராக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஆபத்தான ஆயுதத்துடன் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மற்றோர் ஆடவர் எதிர்நோக்குகிறார்.

அந்த சந்தேகநபர்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்கள். ஒரு சச்சரவின் தொடர்பில் மோதல் இடம்பெற்றதாகவும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் முன்னதாக அறிக்கை ஒன்றில் காவல்துறை தெரிவித்தது.

சம்பவம் தொடர்பாக இரண்டு பேனா கத்திகள், ரொட்டி வெட்டும் கத்தி ஒன்று ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்தது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் சுகுமாரனுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். ஆபத்தான ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு வரை சிறை, பிரம்படித் தண்டனை விதிக்கப்படலாம்.

ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் விளைவித்தால் ஏழாண்டு வரை சிறை, அபராதம், பிரம்படி அல்லது அந்தத் தண்டனைகளைச் சேர்த்தும் வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்