இவ்வாண்டின் அதிபர் தேர்தல் வேட்பாளரான டான் கின் லியானுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடுவது கெடுதல் விளைவிக்கக்கூடிய கவலை தரும் போக்கு என்று திரு இங் கொக் சோங் கூறியுள்ளார். திரு இங்கும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவர்.
“அவர்கள் அதிபர் தேர்தலை கீழ்த்தரமான அரசியலாக மாற்றுகின்றனர். என்னைப் பொறுத்தவரை இது வெட்கப்படவேண்டிய ஒன்று.
“அதிபர் தேர்தலை கீழ்த்தரமான அரசியலாக்கி அதிபர் முறையை எப்படி அவமதிக்கலாம்?” என்று 75 வயது திரு இங் வருத்தம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று சைனாடவுன் காம்பிளக்சுக்குச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவரான டாக்டர் டான் செங் போக், இப்போது செயல்பாட்டில் இல்லாத சிங்கப்பூரர்களுக்கு முதன்மை கட்சியைத் (சிங்கப்பூரியன்ஸ் ஃபர்ஸ்ட்) தொடங்கிய திரு டான் ஜீ சே ஆகியோர் திரு டான் கின் லியானுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் 2011ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில்தான் திரு டான் கின் லியானுக்குத் ஆதரவளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற முறையில் ஆதரவளிக்கவில்லை என்றும் டாக்டர் டான் செங் போக்கும் திரு டான் ஜீ சேயும் கூறினர். அவர்களை திரு இங் சாடினார்.
“இன்று காலை நடந்தது அரசமைப்புச் சட்ட முறைக்கு எதிரான செயலாகும்,” என்றார் ஜிஐசி முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான திரு இங்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் தேர்தலை அரசியலாக்கக்கூடாது என்றும் திரு டான் கின் லியான், அதிபர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாமல் குழம்பியிருக்கிறார் என்றும் திரு இங் சொன்னார்.
அதே வேளையில், அதிபர் தேர்தலில் பிரிவினையை ஏற்படுத்துவதில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஈடுபடவிடல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
“பல எதிர்க்கட்சிகள் ஆதரவளித்து தவறான போக்கில் கொண்டு செல்லும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை சிங்கப்பூர் மக்கள் புரிந்துகொள்வர் என்று நான் நம்புகிறேன். எந்த அரசியல் கட்சியும் அதிபர் பதவி பற்றி திரித்துக்கூறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று திரு இங் கூறினார்.

