‘இளமை காலத்தை அனுபவித்து வளர பிள்ளைகளை அனுமதியுங்கள்’

‘இளமை காலத்தை அனுபவித்து வளர பிள்ளைகளை அனுமதியுங்கள்’

4 mins read
பெற்றோருக்கு அதிபர் வேட்பாளர்கள் இங், தர்மன் வலியுறுத்து
a1f49ae1-e2a1-4819-a4a4-5ebc836840f2
‘எதைப் பற்றியும் அடுத்த அதிபரிடம் கேள்வி கேளுங்கள்’ கேள்வி-பதில் அங்கத்தில் பங்கேற்ற அதிபர் வேட்பாளர்கள் இங் கொக் சொங், 75, தர்மன் சண்முகரத்னம், 66. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிள்ளைகள் தங்கள் இளமைக் காலத்தை அனுபவித்து வளர அனுமதியுங்கள், அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் என்று அதிபர் வேட்பாளர்களான திரு இங் கொக் சொங், திரு தர்மன் சண்முகரத்னம் இருவரும் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதுமே இளையர்களிடம் மனநலப் பிரச்சினை அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அவர்கள் இருவரும் இவ்வாறு வலியுறுத்தி இருக்கிறார்கள்.

‘எதைப் பற்றியும் அடுத்த அதிபரிடம் கேள்வி கேளுங்கள்’ என்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்வி, பதில் அங்கத்தில் அந்த இருவரும் கலந்துகொண்டு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

முன்பே ஒளிப்பதிவு செய்யப்பட்ட கேள்விகள் அவர்களிடத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இளையரிடம் மனஉளைச்சல் அதிகரித்து இருக்கிறது என்பதை இரு வேட்பாளர்களும் சுட்டிக்காட்டினர்.

மற்றோர் அதிபர் தேர்தல் வேட்பாளரான என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான டான் கின் லியான் இந்த அங்கத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.

இளம் சிங்கப்பூரர்களின் கேள்விகளுக்குத் திரு தர்மனும் திரு இங்கும் பதிலளித்தனர்.

இளையரிடையே மனநலப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க எதிர்கால அதிபரால் என்ன செய்ய முடியும் என்று 22 வயது லிம் ஜெங் இயு என்பவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு தர்மன், கல்வி முறையின் அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கம் மாற்றங்களைச் செய்து வருகிறது என்றார்.

இளம் வயது பிள்ளைகள் தேர்வுக்கு ஆயத்தமாகும்போது அளவுக்கு அதிகமான நெருக்கடிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோரை திரு தர்மன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

தியானத்தை இடைவிடாமல் கடைப்பிடிக்கக் கூடியவரான திரு இங், இளையர்கள் தியானத்தில் ஈடுபட்டு வரவேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

அவர்கள் அவர்களாகவே திகழ தியானம் உதவும் என்றார் அவர். சமூக ஊடகம் முழுவதும் அனுகூலமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில் இளையர்கள் தங்கள் சகாக்களின் கண்களுக்குச் சிறந்தவர்களாகக் காட்சி தர வேண்டும் என்ற அழுத்தங்களையும் சமூக ஊடகம் இளையர்களிடம் ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இதைப் பொறுத்தவரை தியானமும் மனத் தெளிவு நிலையும் இளையர்களுக்கு உதவும் என்று திரு இங் கூறினார்.

சிறாரும் இளையரும் தன்னம்பிக்கையுடன் திகழ வேண்டியது மிக முக்கியமானது என்ற திரு இங், மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தியானம் தலைசிறந்த ஒரு வழி என்று தான் கருதுவதாகக் கூறினார்.

ஊழல் முதல் சொந்த தலைமைத்துவ பாணி வரை பல கேள்விகளுக்கும் திரு தர்மனும் திரு இங்கும் பதிலளித்தனர்.

மொத்தமாக அவர்களிடத்தில் ஆறு காணொளிக் கேள்விகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 90 விநாடிகளில் அவர்கள் பதிலளிக்க வேண்டி இருந்தது.

ஹாஜா, 37, என்பவர் ஒரு கேள்வியைத் தாக்கல் செய்திருந்தார். அரசியல்வாதிகள் ஊழல்களில் ஈடுபடுவது போன்ற சூழ்நிலையை எவ்வாறு கையாளுவீர்கள் என்று அதிபர் வேட்பாளர்களிடம் அவர் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த ஜிஐசி நிதியத்தின் முன்னாள் முதலீட்டுத் துறை தலைவரான திரு இங், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடக்கூடிய பிரச்சினைகளைக் கையாளுவதற்காகவே மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

‘‘நாட்டின் சேமிப்பைச் செலவிடுவதில் ஊழல் இடம்பெறுவதாக எனக்குச் சந்தேகம் ஏற்பட்டால், பொருத்தமில்லாதவர்களை முக்கியமான அரசாங்கச் சேவைகளில் நியமிப்பதில் ஊழல் இடம்பெறுவதாக நான் சந்தேகப்பட்டால் அதை நான் எதிர்ப்பேன். என்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன்,’’ என்று திரு இங் குறிப்பிட்டார்.

சொந்த லாபத்தைக் கருத்தில் கொண்டு இடம்பெறக்கூடிய எந்தவொரு தகாத செயல் குறித்தும் அதிபர் மிக விழிப்புடன் இருந்து வரவேண்டும். அத்தகைய தகாத செயல் முழு நிர்வாக முறையையே பாதித்துவிடும் என்று திரு தர்மன் தெரிவித்தார்.

ஊழல் புலன்விசாரணை தொடர்ந்து நடக்க பிரதமர் அனுமதிக்கவில்லை என்றால் அந்த விசாரணையைத் தொடர்ந்து நடத்தும்படி லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இயக்குநருக்கு அதிபர் உத்தரவு பிறப்பிப்பார் என்று திரு தர்மன் கூறினார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் விடுத்த கோரிக்கை எதையும் மறுத்த பிரதமர் யாரும் சிங்கப்பூரில் இதுவரையில் கிடையாது.

ஆனால், எதிர்காலத்தில் எப்படி என்பது தெரியாது. இருந்தாலும் அதிபர் எப்போதும் இருப்பார் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை எட்டுவதற்குத் தோதாக இடம்பெறும் பிரசார காலத்தின்போது பல தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் கருத்தரங்குகளும் நடக்கின்றன.

அவற்றில் ஒன்றாக ‘எதைப் பற்றியும் அடுத்த அதிபரிடம் கேள்வி கேளுங்கள்’ என்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்வி, பதில் அங்கம் இடம்பெற்றது.

அது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் யூடியூப் ஒளிவழியிலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) இரவு 8 மணிக்கு இடம்பெற்றது.

மேலும் செய்தி - பக்கம் 2

குறிப்புச் சொற்கள்