ஓசிபிசி வங்கியின் அனைத்து சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.
திங்கட்கிழமை காலை அதன் சேவைகள் கட்டமைப்புப் பிரச்சனைகளால் தற்காலிகமாகச் செயலிழந்தன.
முன்னதாக, ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தனது கைப்பேசி, இணைய வங்கிச் சேவைகள், பேநவ், ஏடிஎம், வங்கியின் மின்னிலக்க வர்த்தக வங்கித் தளமான வெலோசிட்டி முதலியவை பாதிக்கப்பட்டதாக ஓசிபிசி கூறியது.
பயனீட்டாளர்கள் உடனடிப் பரிவர்த்தனைகளுக்குத் தனது கிளைகளை நாடலாம் என்றும் ஓசிபிசி தெரிவித்திருந்தது.
பிற்பகல் 12.24 மணிக்கு அந்தப் பதிவில் மாற்றம் செய்யப்பட்டது. அனைத்து வங்கிச் சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக அது கூறியது.
தங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் பயனீட்டாளர்களிடம் ஓசிபிசி நன்றி தெரிவித்தது. பயனீட்டாளர்களின் தரவுகளும் பணமும் பாதுகாப்பாய் இருப்பதாகவும் அது உறுதிகூறியது.
தொழில்நுட்பக் கோளாற்றுக்கான காரணத்தை வங்கி விசாரித்து வருகிறது என்றும், கூடிய விரைவில் அது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ஓசிபிசி கூறியது.

