சிங்கப்பூர் ஆயுதப்படையையும் இந்தோனீசிய ராணுவப்படையையும் சேர்ந்த சுமார் 450 வீரர்கள், 35வது சஃப்கர் இந்தோபூரா ராணுவப் பயிற்சியில் பங்கெடுத்தனர்.
இந்த வருடாந்தர கூட்டுப் பயிற்சி ஆகஸ்ட் 20 முதல் 28 வரை சிங்கப்பூரில் நடைபெற்றது. திங்கட்கிழமை நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சிங்கப்பூர் ராணுவப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டேவிட் நியோவும் இந்தோனீசிய ராணுவப்படைத் தளபதி ஜெனரல் டுடுங் அப்துர் ரஹ்மானும் கலந்துகொண்டனர்.
இருநாட்டு ராணுவப்படைகளும் புரிந்துணர்வையும் ஆழமான பந்தத்தையும் வளர்த்துக்கொள்ள இவ்வாண்டின் பயிற்சி வாய்ப்பளித்ததாகத் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை கூறியது.
இந்த ஆண்டு பயிற்சியில், முதல்முறையாக கூட்டு ஆயுதப் படையணி தளபத்தியப் பயிற்சி இடம்பெற்றது. முராய் நகர்ப்புறப் பயிற்சி மையத்தில் தாக்குதல் பயிற்சி நடைபெற்றது.
லெப்பர்ட் 2எஸ்ஜி போர் பீரங்கிகள், லெப்பர்ட் 2 கவச வாகனங்கள், வானூர்திகள், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், நடுத்தர ஹெலிகாப்டர்கள் போன்றவை இதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தை மேஜர் ஜெனரல் நியோ நிறைவு நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.
“1989ல் சிறிய அளவில் தொடங்கிய சஃப்கர் இந்தோபூரா கூட்டுப் பயிற்சி, 35 ஆண்டுகளில் படிப்படியாக வலுவடைந்து, வரைபடம் திட்டமிடும் பயிற்சியிலிருந்து, 1996ல் போர்க்களப் பயிற்சியாகவும், 2017ல் பீரங்கிகளும் காலாட்படை வாகனங்களும் ஈடுபடுத்தப்படும் பயிற்சியாகவும் உருமாறியுள்ளது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நெருக்கமான தற்காப்பு உறவுக்குச் சான்றாக சஃப்கர் இந்தோபூரா பயிற்சி திகழ்வதாகத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ராணுவப் பயிற்சிகள், வருகைகள், நிபுணத்துவத் திறன் பரிமாற்றங்கள் எனப் பலதரப்பட்ட நடவடிக்கைகளிலும் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இருநாட்டு ஆயுதப்படைகளுக்கும் இடையில் வலுவான உறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்க அவை உதவியுள்ளன.
சென்ற வாரம், சிங்கப்பூர், இந்தோனீசியக் கடற்படைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள், பாத்தாமிலும் சுற்றுவட்டாரக் கடற்பகுதியிலும் 27வது “ஈகல் இந்தோபூரா” பயிற்சியில் பங்கெடுத்தனர்.

