தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் கடந்த மாதம் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் சரிந்துள்ளன.
இது பொருளியல் நிலை மந்தமாக இருந்தாலும் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் சீரடைவதற்கான அறிகுறி என்று சொத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை கடந்த மாதம் 0.2 விழுக்காடு குறைந்தது.
கடந்த ஜூன் மாதம் அது 0.1 விழுக்காடு குறைந்தது.
இந்தத் தகவல்களை 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ் ஆகிய சொத்து இணைய வாசல்கள் வெளியிட்டன.
குறிப்பாக, நகர மையம் அருகில், நகர மையத்துக்கு வெளியில் மற்ற வட்டாரங்களில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் 0.2 விழுக்காடு சரிவு கண்டன.
நகர மையத்தில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் 1.1 விழுக்காடு உயர்ந்தன.
இதற்கிடையே, மறுவிற்பனை செய்யப்பட்டுள்ள கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஜூன் மாதத்தில் 804 கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன.
இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 836ஆக உயர்ந்தது.
அடமானம் விதிகம் அதிகரித்திருப்பதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சொத்து விலை தணிக்கும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை குறைந்திருப்பதாக சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சொத்து விலை தணிக்கும் நடவடிக்கையின்கீழ் வீடு வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரி இரு மடங்கு அதிகரிக்கப்பட்டது.
அதன்படி வீடு வாங்கும் வெளிநாட்டினர் செலுத்த வேண்டிய கூடுதல் முத்திரை வரி 30 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.
பொருளியல் நிலையற்றத்தன்மை காரணமாக வீடு வாங்குவோர் அதிகம் பேரம் பேசியிருப்பர் என்றும் இதன் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் குறைந்திருக்கக்கூடும் என்றும் ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் தெரிவித்தார்.
வட்டி விகித அதிகரிப்பு, இடைவிடாமல் அதிகரிக்கும் சொத்து விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீடு வாங்குபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதாக புராப்நெக்ஸ் சொத்து நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் திருவாட்டி வோங் சியூ யிங் கூறினார்.
வீடு வாங்கும் படலத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடுத்த சில காலாண்டுகளில் அவற்றின் விலைகள் எவ்வாறு பதிவாகின்றன என்பதைக் காண சிலர் காத்திருக்கக்கூடும் என்று திருவாட்டி வோங் தெரிவித்தார்.
கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை குறைந்துள்ளபோதிலும் அந்தச் சரிவு மிகவும் சிறிய அளவிலானது என்று ஆரஞ்சுடீ அண்ட் டாய் சொத்து நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவித் தலைவர் கிறிஸ்டின் சுன் தெரிவித்தார்.

