ஆளும் கட்சியாலோ எதிர்க்கட்சியாலோ கட்டுப்படுத்தப்படும் அல்லது கையாளப்படும் ஒருவரை அதிபராக சிங்கப்பூரர்கள் விரும்ப மாட்டார்கள் என்று அதிபர் தேர்தல் வேட்பாளர் இங் கொங் சொங் தெரிவித்து உள்ளார்.
அதே நேரம் தாம் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராதவர் என்று அவர் மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்.
“அரசியலுக்குத் தொடர்பில்லாத அதிபரே சிங்கப்பூருக்குத் தேவை,” என்று மரின் பரேட் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை காலை வாக்கு சேகரிப்பின்போது செய்தியாளர்களிடம் திரு இங் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “தேசிய நிதி இருப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான விதிகளை ஏற்படுத்திய முன்னாள் நிதி அமைச்சரே நாட்டின் அதிபராக வர விரும்புவது “ஆபத்தானது”,” என்றார்.
75 வயதான திரு இங், “முன்னாள் நிதி அமைச்சர் அதிபராக இருப்பதில் ‘திருப்தியின்மை’ ஏற்படும். காரணம், ‘தாம் ஏற்படுத்திய முறையை தாமே சோதித்துக்கொள்வது’ போன்ற நிலை அது,” என்றார்.
“நடப்பில் இருக்கும் முறை பற்றி போதுமான அளவு ஒருவர் தெரிந்திருந்தாலே சரியானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர், பாரபட்சமற்றவராகவும் இருக்க வேண்டும். அவ்வாறின்றி, தாம் ஏற்படுத்திய முறை மீது தாமே கேள்வி கேட்பது என்பது மிகவும் கடினமானது.
“அத்துடன் அதிபராக வருவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வரை தாம் ஈடுபட்ட செயலுக்கு தாமே சவாலாக விளங்குவது என்பதும் மிகவும் கடினமானது என்றே நான் கருதுகிறேன்,” என்று குறிப்பிட்டார் ஜிஐசி என்னும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான திரு இங்.
அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று வேட்பாளர்களில் திரு தர்மன் சண்முகரத்னமே முன்னாள் நிதி அமைச்சர். 2007 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் நிதி அமைச்சராக அவர் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன், ஜூலை மாதம் அனைத்துவித அரசாங்கப் பொறுப்புகளில் இருந்தும் ஓய்வுபெற்றார். அத்துடன், ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் விலகிய பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அதிபர் ஆவதற்குத் தமக்கு தகுதி இருப்பதாகக் குறிப்பிட்ட திரு இங், சிங்கப்பூர் நாணய ஆணையத்திலும் அரசுரிமை செல்வ நிதியத்திலும் நிதி இருப்பை உருவாக்குவதில் தமக்கு 45 ஆண்டு அனுபவம் இருப்பதும் எந்த ஓர் அரசியல் கட்சியைச் சாராது தாம் இருப்பதும் அத்தகுதிகள் என்றார்.

