ஏழாவது முறையாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்க சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கில் சிங்கப்பூர்-ஆப்பிரிக்க நிறுவனங்களிடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் ஆப்பிரிக்க நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்திடப்படும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உற்பத்தித்திறன், மின்னிலக்கமயமாதல் மற்றும் தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மைமிக்க மேம்பாடுகள், போக்குவரத்து, தளவாடத்துறை ஆகியவற்றில் இந்த நிறுவனங்கள் கூடுதல் வாய்ப்புகளைத் தேடுகின்றன.
2010ஆம் ஆண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
சிங்கப்பூர் மற்றும் ஆப்பிரிக்க வர்த்தகத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி கலந்துரையாட முக்கிய தளமாக இக்கருத்தரங்கு விளங்குகிறது.
கருத்தரங்கில் 40 நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட வர்த்தக, அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஓராண்டில் பிரதமர் லீ சியன் லூங் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவான்டா, தென்னாப்பிரிக்கா, கென்யா ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகத் தொடர்பு உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் இடையிலான வர்த்தகம், 2019ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 15 விழுக்காடு அதிகரித்திருப்பதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டில் இந்த வர்த்தகம் $19.4 பில்லியனை எட்டியது.
“ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 40 நாடுகளில் கிட்டத்தட்ட 100 சிங்கப்பூர் நிறுவனங்கள் வர்த்தகம் செய்கின்றன. ஆப்பிரிக்காவில் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி பலனடையும்படி சிங்கப்பூர் நிறுவனங்களை ஊக்குவிக்கிறேன்,” என்று கருத்தரங்கில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்பான ஆற்றலை வளர்த்துக்கொள்ள பயிற்சி ஒன்றுக்கு வெளியுறவு அமைச்சும் வர்த்தக, தொழில் அமைச்சும் ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று திரு கான் கூறினார்.

