எவருக்கும் ஆதரவில்லை: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கைவிரிப்பு

எவருக்கும் ஆதரவில்லை: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கைவிரிப்பு

2 mins read
547b1904-ca9a-4aec-9d3a-d86de61b58fb
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) கொடி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கப்போவதில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) தெரிவித்து உள்ளது.

வேட்பாளர்களில் ஒருவரான டான் கின் லியானுக்காக வாக்கு எண்ணப்படுவதைக் கண்காணிக்கும் முகவர்களாகச் செயல்பட தமது கட்சி உறுப்பினர்களுக்கு பிஎஸ்பி மின்னஞ்சல் அனுப்பியதால் எழுந்த சந்தேகங்களுக்கு அக்கட்சி பதிலளித்தது.

இது குறித்து ‘சிஎன்ஏ’விடம் தெரிவித்த பிஎஸ்பி, “உறுப்பினர்களுக்கு கட்சி அனுப்பிய மின்னஞ்சல் தனிப்பட்டோருக்கானது. அது ஓர் அங்கீகாரத் தொடர்பு அல்ல,” என்றது.

அதிபர் தேர்தல் என்று குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களைப் புரிந்துகொள்ள ‘பொன்னான வாய்ப்பு’ என்று எழுதப்பட்டு இருந்ததை சிஎன்ஏ கவனித்தது.

வாக்கு எண்ணப்படுவதைக் கண்காணிக்கும் முகவர்களாகச் செயல்பட பதிவு செய்யுமாறு கட்சியின் தொண்டூழியர்களைக் கேட்டுக்கொண்ட பிஎஸ்பி, வாக்காளர்களின் தரவுகளைச் சேகரிக்க கட்சிக்கு அது உதவியாக இருப்பதோடு அடுத்த (பொது) தேர்தலுக்கு அது தேவைப்படும் என்று கூறியது.

கட்சியின் எத்தனை தொண்டூழியர்கள் அந்த மின்னஞ்சலைப் பெற்றனர் என்ற விவரத்தை கட்சி தெரிவிக்கவில்லை. கட்சி உறுப்பினர் சேர்ப்பில் அண்மையில் புதிய முறையைப் புகுத்தியதாகத் தெரிவித்த பிஎஸ்பி, அதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகக் கூறியது.

அதிபர் என்பவர் சிங்கப்பூரின் ஒற்றுமையின் சின்னமாகத் திகழக்கூடியவர் என்றும் எந்தவோர் அரசியல் கட்சியையும் பிரதிநிதிக்காத சுயேட்சையாக அவர் இருப்பது அவசியம் என்றும் சிஎன்ஏயின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிஎஸ்பி கூறியது.

“இந்தக் கொள்கைகளை பிஎஸ்பி ஆதரித்தாலும் நடைபெற இருக்கிற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் அல்லது அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம், தங்களுக்குப் பிடித்த வேட்பாளரை ஆதரிக்கும் சுதந்திரம் தனிப்பட்டவர்களுக்கு உண்டு,” என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்