சிங்கப்பூர் கோல்ஃப் விளையாட்டாளர் சங்கம் கோல்ஃப் கிளப் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதன்கிழமை சிங்கப்பூர் ஐலண்ட் கண்ட்ரி கிளப்பில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் மோசடிச் சம்பவங்கள் மற்றும் இதர குற்ற நடவடிக்கைகளில் கோல்ஃப் கிளப்பிற்கு இருக்கும் சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடி தொடர்பாக அண்மையில் $1 பில்லியன் பெறுமான சொத்துகள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
அதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்களில் ஐவர் செந்தோசா கோல்ஃப் கிளப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிளப்பில் உறுப்பினராகச் சேர பெரும் தொகையைச் செலுத்த வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பலரும் அந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
கூட்ட அழைப்பிதழில் இது தொடர்பாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
“கோல்ஃப் விளையாட்டுத் துறையின் நிதி முதலீடுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. துரதிருஷ்டவசமாக, அந்த முதலீடுகளில் ஒரு பகுதி குற்றச் செயல்கள் தொடர்பானவையாக உள்ளன,” என்று அது தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கூட்டத்தில் பேச இருப்பவர்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் சட்டவிரோதப் போக்கு குறித்தும் சுயநலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தும் தந்திரம் குறித்தும் பேசுவதோடு இவற்றால் கோல்ஃப் விளையாட்டுத் துறைக்கு ஏற்படும் அபாயம் குறித்தும் எச்சரிப்பார்கள்.
மேலும், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடிக்கு எதிராகச் செயல்படுவது எப்படி என்பது குறித்தும் பேச்சாளர்கள் விளக்குவர் என்று சிங்கப்பூர் கோல்ஃப் சங்கம் கூறியுள்ளது.
செந்தோசா கோல்ஃப் கிளப்பில் 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக அதன் இணையத்தளம் தெரிவிக்கிறது. அவர்களுக்கு ஏராளமான வசதிகளும் உண்டு.
அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்புத் தர தமது கிளப் தயாராக இருப்பதாக செந்தோசா கிளப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

