அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு நாள்களே எஞ்சி இருக்கும் நிலையில் சுயேச்சை வேட்பாளரான டான் கின் லியானின் பிரசார உத்தி புதுவடிவம் எடுத்து உள்ளது.
வாக்காளர்களை உணவங்காடி நிலையங்களில் சந்திப்பதற்குப் பதிலாக அவரவர் வீடுகளிலேயே சந்தித்து பிரசார வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அளிப்பதே அந்த உத்தி.
குறிப்பாக, சமூக ஊடகங்களிலும் உணவங்காடி நிலையங்களிலும் காணப்படாத வாக்காளர்களைக் குறி வைத்து பிரசாரம் செய்யப்படுவதாக திரு டானின் பிரசார மேலாளர்களில் ஒருவரான ஆலன் இயோ கூறினார்.
கிட்டத்தட்ட 20 தொண்டூழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் குவீன்ஸ்டவுன், டோவர், கிளமெண்டி, ஜூரோங் ஈஸ்ட், போன விஸ்தா பகுதிகளில் திரு டானின் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
அந்தக் குழுவில் வேட்பாளர் டான், 75, காணப்படவில்லை.
குவீன்ஸ்டவுன் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள புளோக்குகளில் ஒவ்வொரு மாடியாக ஏறி, இறங்கி வீடுகளில் துண்டுப் பிரசுரங்களை தொண்டூழியர்கள் விநியோகித்தனர்.
வீட்டில் குடியிருப்பாளர்கள் இருந்தால் அவர்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்கும் விதமாக துண்டுப் பிரசுரங்களை அளித்த அவர்கள், ஆளில்லாத வீடுகளின் வாசலில் அவற்றை விட்டுச் சென்றனர்.
சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் ஏறக்குறைய 30,000 பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை விநியோகிக்க திட்டம் வைத்திருப்பதாகவும் இதர வட்டாரங்களுக்கு புதன்கிழமை செல்ல இருப்பதாகவும் திரு இயோ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வேட்பாளர் திரு டானின் அணியினர் இவ்வாரத் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 150,000 துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வாங்கி இருப்பதாகவும் அதற்கான செலவு $15,000க்கும் கீழ் என்றும் அவர் சொன்னார்.
“வலையொலி மூலமாக இளையர்களிடமும் உணவங்காடி நிலையங்களில் மூத்த வாக்காளர்களிடமும் பிரசாரம் மேற்கொண்டோம். தற்போது இந்த இருவருக்கும் இடைப்பட்ட, குறிப்பாக சமூக ஊடகங்களில் இடம்பெறாத வாக்காளர்களைச் சென்றடைவது எங்களின் நோக்கம்,” என்றும் திரு இயோ குறிப்பிட்டார்.

