புதிய வியட்னாமிய தொழிற்பேட்டைகளால் இருநாட்டு நிறுவனங்கள் கூடுதல் பலன்

புதிய வியட்னாமிய தொழிற்பேட்டைகளால் இருநாட்டு நிறுவனங்கள் கூடுதல் பலன்

2 mins read
2a62240a-9962-407a-96c8-7f763b09bc09
ஹனோய் அதிபர் மாளிகையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு லீயுடன் வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின் (வலது). - படம்: சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சு

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நான்கு வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டைகளின் (விஎஸ்ஐபி) மூலம் கிடைக்கக்கூடிய கூடுதல் பலன்களை அனுபவிக்க சிங்கப்பூரிலும் வியட்னாமிலும் உள்ள நிறுவனங்கள் தயாராகிவிட்டன.

இவை தவிர இதர நான்கு தொழிற்பேட்டைகளை தனது பட்டியலில் இணைத்துள்ளதாக செம்ப்கார்ப் டெவலப்மெண்ட் அறிவித்து உள்ளது.

செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் பெருநிறுவனத்தின் துணை நிறுவனமான செம்ப்கார்ப் டெவலப்மெண்ட் எரிசக்தி மற்றும் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்தித் தரும் வல்லமை பெற்றது.

புதியவை மூலம் வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 17ஆக உயரும்.

வருங்காலத்தில் நிறுவப்பட இருக்கும் மேலும் 10 தொழிற்பேட்டைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்னாமிய தலைநகர் ஹனோயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின்னும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திரு லீ அந்நிகழ்வில் பேசுகையில், “வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டைகள் என்பது புத்தாக்கத்தையும் வளர்ச்சியையும் தாங்கிய ஒரு தொடர் பயணம்,” என்றார்.

தென்வியட்னாமின் பின் டுவோங் மாநிலத்தில் அமைக்கப்பட்ட முதல் வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டை, மின்விளக்கு தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

அதே மாநிலத்தில் உள்ள இரண்டாவது தொழிற்பேட்டை நவீன தளவாட வசதிகளை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், பின் டுவோங்கில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மூன்றாவது தொழிற்பேட்டை விவேகத்திறன்களுடன் பசுமைச் சூழலை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் சூரிய சக்திப் பண்ணை ஒன்றும் அதில் இடம்பெறும் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “பின் டுவோங் மூன்றாவது தொழிற்பேட்டையின் செயலாக்கப் பணிகள் முழுவதும் விவேகத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

“அத்துடன், தொழிற்கூட வட்டாரங்களுக்கான சிங்கப்பூரின் பச்சை முத்திரைத் தகுதியையும் அது பெறக்கூடியதாக இருக்கும்,” என்றார்.

“வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டங்கள் வியட்னாமின் பொருளியல் வளர்ச்சிக்கும் அதன் தொழில்துறை உருமாற்றத்திற்கும் தொடர்ந்து பங்களிக்கும் என்பது எனது நம்பிக்கை,” என்றும் திரு லீ தமது உரையில் குறிப்பிட்டார்.

வியட்னாமியப் பிரதமர் பேசுகையில், புதிய வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டைகள் நான்கு வசதிகளை ஒருங்கே பெற்றிருக்கும் என்றார். தொழிற்பேட்டை, சேவை மையம், குடியிருப்பு நிலையம், உயர்தொழில்நுட்ப மையம் ஆகியவை அந்த நான்கு வசதிகள் என்று அவர் பட்டியலிட்டார்.

வியட்னாமுடனான சிங்கப்பூரின் பொருளியல் உறவின் முக்கிய அம்சமாக 1996ஆம் ஆண்டு, முதல் வியட்னாம்-சிங்கப்பூர் தொழிற்பேட்டை நிறுவப்பட்டது.

ஏற்கெனவே வியட்னாமின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வட்டாரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழிற்பேட்டைகள் $18.4 பில்லியன் (S$24.9 பில்லியன்) முதலீடுகளை ஈர்த்துள்ளன.

அந்தத் தொழிற்பேட்டைகளில் இயங்கும் 900க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் ஏறக்குறைய 300,000 வேலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

குறிப்புச் சொற்கள்