ஈசூன் அவென்யூ 2ல் செவ்வாய்க்கிழமை காலை இழுவை லாரி ஒன்றின் இயந்திரம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விரைந்து வந்து தீயை அணைத்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ இதர சேதங்கள் பற்றியோ தகவல் இல்லை.
சம்பவம் பற்றி தங்களுக்கு காலை 11.25 மணியளவில் அழைப்பு வந்ததாக அந்தப் படை கூறியது.
சிங்கப்பூர் ரோடு ஆக்சிடெண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படம் ஒன்றில், மேம்பாலம் ஒன்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் தீப்பற்றி எரிவதையும் கரும் புகை வெளியேறுவதையும் காணமுடிந்தது.
இருப்பினும் வாகனத்தின் தோற்றம் அந்தப் படத்தில் தெளிவற்று இருந்தது.
நார்த்பாய்ண்ட் சிட்டி கடைத்தொகுதிக்கு சற்று தொலையில் மேம்பாலம் அருகே தீச் சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதியில் இருந்த பென் கோ என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு தாம் சென்றபோது தீ ஏற்கெனவே அணைக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தீ மூண்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.