கல்வி மற்றும் கல்வி சாரா துறைகளில் சிறந்து விளங்கிய 195 மாணவர்கள் இவ்வாண்டிற்கான கல்வி அமைச்சின் சிறப்பு விருதுகளைப் பெற்றனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விருது விழாவில் இவ்வாண்டு 96 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த இம்மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வண்ணம் 11 பிரிவுகளில் மொத்தம் 206 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஆறு மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கிய கல்வி, மனிதவள அமைச்சுகளின் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், “இளைய தலைமுறையின் வெற்றிகள் சிங்கப்பூர் சமூகத்தின் எதிர்கால சாதனைகளை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு இளையரும் தன்னை மேம்படுத்திக் கொள்வதோடு சமூகத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்பைத் தர முனைய வேண்டும்“ என்று கூறினார்.
சவால்மிகுந்த வருங்காலத்தை எதிர்கொள்ள தேவையான வாழ்வியல் விழுமியங்களையும் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான கற்றல் அனுபவங்களை உற்சாகமாக அணுக வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார்.
தடைகளைத் தகர்த்தெறிந்த மாற்றுத்திறனாளி
பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ சென்டர் - மார்கரெட் டிரைவ் பள்ளி மாணவி சக்தி பிரியா ரமேஷ், 18, முன்மாதிரி மாணவருக்கான லீ குவான் இயூ விருது பிரிவில் விருதினைப் பெற்றுள்ளார்.
சக்கர நாற்காலியில் வலம்வரும் இவர் தன்னுடைய நேர்மறை நடத்தைக்காகவும் தனித்துவமான தலைமைத்துவ பண்பிற்காகவும் இவ்விருதினை பெற்றுள்ளதாக முன்னதாக அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பெயருக்கேற்றாற்போல் தன் மகள் மனதளவில் மிகுந்த சக்திபடைத்தவர் என்று பெருமிதத்துடன் கூறினார் தந்தை ரமேஷ் சம்பந்தம், 52. ஹில்வியூ பகுதியில் மினிமார்ட் கடை வைத்திருக்கும் இவரின் கடை வேலைகளில் சக்தி பிரியா தன்னுடைய ஓய்வு நேரங்களில் உதவி வருகிறார்.
இரண்டு தம்பிகளுக்கு அக்காவான இவருடைய வசதிக்கேற்ப வீட்டினை வடிவமைத்துள்ளதாக திரு ரமேஷ் தெரிவித்தார். இதுபோன்ற பிள்ளைகளுக்கு கூடுதல் அக்கறை கிடைத்தால் அவர்கள் வாழ்வில் பல உயரங்களைத் தொடுவார்கள் என்றும் இவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தன் மகள் அன்றாட வாழ்வில் தனித்து இயங்குவதற்கான அனைத்து வசதிகளும் சிங்கப்பூரில் இருப்பது மிகுந்த நிம்மதியளிக்கிறது என்று கூறிய இவர், எதிர்காலத்தில் தன் மகளின் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மொத்த குடும்பமும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
“இவ்விருது கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் இருந்தாலும் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன். எதிர்காலத்தில் காசாளர் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தந்தை கடை வைத்திருந்தாலும் வேறு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து தந்தைக்கு பணம் சம்பாதித்து கொடுக்க விரும்புகிறேன்“ என்று கூறினார்.
சிங்கப்பூர் மாணவர்களின் கற்றல் முறையை மேம்படுத்த ஆவல்
திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் இயூ விருது பிரிவில் விருதுபெற்ற ரீஜே எசேக்கியேல் ஜெயகுமார், 19, செயற்கை நுண்ணறிவு மூலம் சிங்கப்பூர் மாணவர்கள் கல்விகற்கும் முறையை எளிமையாக்க விரும்புவதாக கூறினார்.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயன்முறை செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு துறையில் பட்டயப்படிப்பு படித்துவரும் ரீஜே, “அன்றாட பாடங்களையும் ஆழமான கல்வி ரீதியான கருத்துக்களையும் இலவசமான இணையதளங்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைக் கொண்டு எளிமையான முறையில் கற்பிக்க முடியும்” என்று கூறினார்.
தன் சுய பண்புகளை மேம்படுத்திக் கொள்ளும் பல வாய்ப்புகள் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கிடைத்ததாக இவர் சொன்னார். கல்லூரி சார்ந்த பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ள இவர் நேரத்தை சரியாக ஒதுக்கீடு செய்வது ஆக்கபூர்வமான பல செயல்களை செய்ய வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் நடைபெற்ற இவ்விருது விழாவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விருதுகள் வழங்கப்பட்ட 11 பிரிவுகள் பின்வருமாறு:
பிரதமர் புத்தகப் பரிசு, கணக்கு மற்றும் அறிவியலுக்கான லீ குவான் இயூ விருது, திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் இயூ விருது, தலைசிறந்த வழக்கநிலை மாணவர்களுக்கான லீ குவான் இயூ விருது, அனைத்துத் துறை உன்னதத்திற்கான லீ குவான் இயூ விருது, சிறப்புச் சாதனைக்கான லீ சியன் லூங் விருது, தலைசிறந்த அனைத்துத் துறை சாதனையாளருக்கான லீ சியன் லூங் விருது, இருகலாசாரப் படிப்பில் தலைசிறந்த மாணவர்களுக்கான லீ சியன் லூங் விருது, சுல்தான் ஹஜி ஓமார் அலி சைஃப்புடின் புத்தகப் பரிசு, முன்மாதிரி மாணவருக்கான லீ குவான் இயூ விருது மற்றும் லீ சியன் லூங் இருவழி மின்னிலக்க ஊடக அறிவார்ந்த தேச விருது.

