சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் வாக்களிப்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடக்கிறது.
முடிந்தால் நடந்து அல்லது பொதுப் போக்குவரத்தில் சென்று வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் மூவர் போட்டியிடுகிறார்கள். அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங், 75; முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66; என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான், 75, ஆகிய அந்த மூவரும் சுயேச்சை வேட்பாளர்கள்.
சிங்கப்பூரர்கள் வாக்களித்து அவர்களில் ஒருவரை அதிபராகத் தேர்ந்து எடுக்கவுள்ளனர்.
வாக்குச்சாவடிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.
வாக்குச்சாவடி அமைந்து இருக்கும் பள்ளிக்கூடங்கள், சமூக நிலையங்கள் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்திவைக்க அனுமதி இருக்காது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடிக்கு அருகே இருக்கும் சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாது. விதிமீறும் வாகனங்கள் கட்டி இழுத்துச் செல்லப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
உடல்நிலை சரியில்லாதவர்கள், உடற்குறையாளர்கள் போன்ற வாக்காளர்களை ஏற்றிவரும் வாகனங்கள் வாக்குச்சாவடிகளில் அவர்களை இறக்கிவிடலாம். அதற்காக இடவசதி இருக்கும்.
வாக்காளர்கள் வாக்களித்ததும் வாக்குச் சாவடியைவிட்டு சென்றுவிட வேண்டும். அங்கேயே திரிந்துகொண்டு இருக்கலாகாது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் யாரையாவது, எதையாவது பார்த்தால் அதுபற்றி பொதுமக்கள் 999 என்ற எண்ணில் காவல்துறையை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
வாக்களிப்பு நாளன்று தேர்தல் நடைமுறையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த காவல்துறை உறுதிபூண்டுள்ளது.
காவல்துறை சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வரும். யாராவது வாக்களிப்பு நடைமுறையில் தலையிட்டால் அல்லது அதற்கு இடையூறு செய்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

