அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இங் கொக் சொங் செவ்வாய்க்கிழமை கிளமெண்டி செண்ட்ரலில் வாக்குவேட்டை ஆடினார்.
அப்போது 30 வயது ஆடவர் ஒருவர் திரு இங்கிற்கு இடையூறு விளைவித்தார். பிறகு அந்த ஆடவர் தானே காவல்துறைக்குச் சென்று அந்தச் சம்பவம் பற்றி புகார் தெரிவித்தார்.
அந்த ஆடவர் மனநலக் கழகத்திற்கு அனுப்பப்பட்டார்.
இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட காவல்துறை, காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் இருக்கும் ஒரு கடைத்தொகுதிக்கு வெளியே திரு இங் இருந்தபோது அந்த ஆடவர் திரு இங்கை நோக்கி சத்தம் போட்டதாகக் கூறப்படுவதாகவும் இதுபற்றி தங்களுக்குச் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.05 மணிக்குத் தகவல் கிடைத்த தாகவும் தெரிவித்தது.
அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றபோது அந்த ஆடவர் அங்கு இல்லை. பிறகு அவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்த கிளமெண்டி காவல்துறை அவரைத் தேடியது.
இதனிடையே, கிட்டத்தட்ட அதே நேரத்தில் அந்த ஆடவர் கிளமெண்டி அக்கம்பக்க காவல்துறை சாவடிக்குத் தானே சென்று அந்தச் சம்பவம் பற்றி புகார் கூறினார்.
பிறகு அவர் மனநலக் கழகத்திற்கு அனுப்பப்பட்டார். அதுபற்றி அவரின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, திரு இங் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சம்பவத்தை அடுத்து தனக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்திக்கொண்டு புதன்கிழமை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

