தேசிய தினப் பேரணி குறித்து கருத்து: கென்னத் ஜெயரத்தினத்திற்கு ‘பொஃப்மா’ உத்தரவு

தேசிய தினப் பேரணி குறித்து கருத்து: கென்னத் ஜெயரத்தினத்திற்கு ‘பொஃப்மா’ உத்தரவு

கோப்புப் படம்: சாவ் பாவ்

30 Aug 2023 - 3:36 pm

2 mins read

சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்தினத்திற்கு, ‘பொஃப்மா’ எனப்படும் பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் நான்காவது முறையாகத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய தினப் பேரணி குறித்து வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பில் அவருக்கு அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேலையின்மை, ரிடவ்ட் ரோட்டில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் வாடகைக்கு எடுத்துள்ள வீடுகள், வெளிநாட்டில் வரி ஏய்ப்பு ஆகியவை குறித்த பொய்யான தகவல்களை அவர் வெளியிட்டார்.

மேலும், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடி தொடர்பில் அரசாங்கம் செயலாற்றவில்லை என்றும் அவர் குறைகூறினார்.

‘த ரைஸ்பௌல் சிங்கப்பூர்’ இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையிலும் ஃபேஸ்புக், ‘எக்ஸ்’ (டுவிட்டர்), லிங்க்ட்இன் ஆகியவற்றில் வெளியிட்ட பதிவுகளிலும் அவர் அவ்வாறு கருத்துரைத்திருந்தார்.

எனவே, சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங், புதன்கிழமை திரு ஜெயரத்தினத்திற்குத் திருத்த உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு ஜெயரத்தினத்தின் கட்டுரையிலும் பதிவுகளிலும் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பை அவர் வெளியிட வேண்டும். தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் ‘ஃபேக்சுவலி’ எனும் அரசாங்க இணையத்தளத்திற்கான இணையத் தொடர்பு முகவரியையும் அவர் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

‘மாஜுலா’, ‘பைனியர் தலைமுறை’, ‘மெர்டேக்கா தலைமுறை’ நிதித் திட்டங்கள் மூலம், ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசாங்கம் முழுவதுமாக விநியோகிக்காது எனப் பொருள்படும்படி திரு ஜெயரத்தினம் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

வேலையின்மை விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக முழு நேரக் கல்வி பயிலும் மாணவர்களையும் பணிபுரிவோராக அரசாங்கம் காட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

முதல்முறையாக ரிடவ்ட் ரோடு வாடகை வீடுகள் தொடர்பான கருத்துகளுக்காக ஜூலை மாதத்தில் திரு ஜெயரத்தினத்திற்கு ‘பொஃப்மா’ திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு மேலும் மூன்று திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்