பள்ளிகளுக்கு அருகே மாணவர்களைப் படமெடுத்து அவர்களது தனிப்பட்ட விவரங்களைப் பெற அவர்களை நச்சரித்த 46 வயது ஆடவர் ஒருவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படவிருக்கிறார். ஏற்கெனவே சிறுமிகளுக்குத் தொல்லை விளைவித்த குற்றத்துக்காக ஃபோங் போ குவென் சிறைத் தண்டனையை அனுபவித்து இருந்தார்.
அண்மைய சம்பவங்களில் ஒன்றாக, போலி ஆய்வு ஒன்றை நடத்தி ஒரே நாளில் 500க்கும் அதிகமான மாணவிகளிடமிருந்து தனிப்பட்ட விவரங்களை ஃபோங் பெற்றார்.
மேலும், காணொளிகளைப் பதிவுசெய்யும் வசதியுடைய புகைப்படக் கருவி அடங்கிய கண்ணாடியை அணிந்து பள்ளிகளுக்கு வெளியே மாணவிகளை ஃபோங் ரகசியமாக படமெடுத்தார்.
மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஃபோங்கிற்கு புதன்கிழமை 18 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோன்ற குற்றங்கள் புரிந்த ஃபோங்கிற்கு 2019 அக்டோபர் 1ஆம் தேதி மூன்று மாதச் சிறைத் தண்டனையும் $8,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.


