பொதுப் போக்குவரத்து நிலையங்களில் உள்ளூர் கலைஞர்களின் இசையைக் கேட்டு மகிழ வாய்ப்பு

பொதுப் போக்குவரத்து நிலையங்களில் உள்ளூர் கலைஞர்களின் இசையைக் கேட்டு மகிழ வாய்ப்பு

2 mins read
தேசிய கலைகள் மன்றம், எஸ்எம்ஆர்டி ஒத்துழைப்பில் உள்ளூர் கலைகளை பொதுப்போக்குவரத்து நிலையங்களில் பயணிகள் ரசிக்கலாம்.
b601a789-0e87-4733-b3cb-9625394e6d4c
(படத்தில் இடமிருந்து) எஸ்எம்ஆர்டி தலைவர் சியா மூன் மிங், எஸ்எம்ஆர்டி குழுத் தலைமை நிர்வாகி கியன் ஹூன் பிங், தேசிய கலைகள் மன்றத் தலைமை நிர்வாகி லோ எங் டியோங், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சர் லோ யென் லிங். - படம்: ஹியர்65

பிரபல சிங்கப்பூர் தமிழ் சொல்லிசைக் கலைஞர் யங் ராஜா, நியூயார்க் டைம்ஸ் சதுக்க விளம்பரப் பலகையில் இடம்பெற்றுள்ள மரியான் கார்மல் முதலான உள்ளூர் கலைஞர்களின் இசைகளை இனி ரயில் நிலையங்களிலும் பேருந்து முனையங்களிலும் கேட்டு மகிழலாம்.

இசையுடன் கவிதை, சாலைக் கலைஞர்களின் படைப்புகளையும் கண்டுகளிக்கலாம்.

தேசிய கலைகள் மன்றமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) கையெழுத்திட்டன.

இத்திட்டத்தின்வழி 125 பெருவிரைவு, இலகு ரயில் நிலையங்களிலும் பேருந்து முனையங்களிலும் உள்ளூர் இசை ஒலிக்கும். 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பொதுப் போக்குவரத்துப் பயணிகளிடம் உள்ளூர் இசை கொண்டுசெல்லப்படும்.

இதன்மூலம் மேலும் பல உள்ளூர் கலைஞர்கள் ஊக்கம் பெறுவர் என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் லோ யென் லிங் கூறினார். ‘ஐ பிளே எஸ்ஜி மியூசிக்’ என்ற இந்தத் திட்டத்தை பிராஸ் பசா பெருவிரைவு நிலையத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

உள்ளூர் பாடல்களைக் கேட்பதில் மக்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக 2021இல் தேசிய கலைகள் மன்றம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஏற்ப இசை வழங்கப்படும். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களுடன் தொடங்கியுள்ள இத்திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் பாடல் தொகுப்பு மாற்றப்படும்.

‘பேண்ட்வேகன்’ இசை ஊடக நிறுவனத்தின் உள்ளூர் இசையைப் பிரபலப்படுத்தும் ‘ஹியர்65’ இயக்கம் இதனைத் தயாரித்து வழங்கும். ‘யுனிவர்சல் மியூசிக் சிங்கப்பூர்’, ‘வார்னர் மியூசிக் சிங்கப்பூர்’, ‘சோனி மியூசிக் சிங்கப்பூர்’, போன்ற இசை நிறுவனங்களின் வெளியீடுகளும் இம்முயற்சியில் இடம்பெறும்.

இந்தத் திட்டத்தின் மற்றொரு பகுதியாக ரயில்களில் உள்ளூர் கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெற உள்ளன. கவிதைகளும் கதைகளும் ரயில்களில் இடம்பெறும்.

‘ஆர்ட்:டிஸ் (ART:DIS) சிங்கப்பூர்’ அமைப்புடனான கூட்டுமுயற்சியாக உடற்குறைபாடு உள்ள சாலைக் கலைஞர்களின் படைப்புகளை ரயில் நிலையங்களில் இடம்பெறச் செய்வதும் திட்டத்தின் இன்னொரு பகுதி.

தேசிய கலைகள் மன்றம்-எஸ்எம்ஆர்டி பங்காளித்துவம் இதற்கு முன்பும் கலைசார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தின.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் எஸ்எம்ஆர்டி ரயில்கள், உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து ‘காமிக் கனெக்ட்’ என்ற இயக்கத்தின்கீழ் வரலாற்றைச் சித்திரிக்கும் படக்கதை சுவரோவியங்களை 35 ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தியது.

பொதுமக்கள் வாசித்து மகிழும் வகையில் சென்ற மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பியானோ இசைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்