தர்மன்: அனைத்துலக நற்பெயரை, அனுபவத்தைக் கொண்டு சிறந்த முறையில் பணியாற்றுவேன்

தர்மன்: அனைத்துலக நற்பெயரை, அனுபவத்தைக் கொண்டு சிறந்த முறையில் பணியாற்றுவேன்

2 mins read
4af8336f-302b-4ecc-a5fa-6353d9ad295b
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனக்குள்ள அனைத்துலக நற்பெயரையும் அனுபவத்தையும் கொண்டு அந்தப் பதவியில் சிறப்பாகச் செயலாற்றப்போவதாக திரு தர்மன் சண்முகரத்னம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

அதிபர் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் புதன்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தனர்.

வேட்பாளர்களில் ஒருவரான திரு தர்மன் சண்முகரத்னம், தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தன்னுடைய அனைத்துலக புகழையும் அனுபவத்தையும் கொண்டு அதிபர் பதவியை திறம்பட ஆற்றப்போவதாகத் தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் கட்சி அடிப்படையில் வேறுபட்டு செயல்படுவது ஒரு போதும் தன்னுடைய நோக்கமாக இருந்தது கிடையாது என்று அவர் கூறினார்.

தான் அப்படி செயல்பட்டு இருந்தால் அது வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்குச் சிறந்த ஆதரவைப் பெற்று தருவதற்காகத்தான் இருக்கும் என்று அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தெரிவித்தார்.

‘‘அடித்தள நிலையில் தீவிரமாக தொண்டாற்ற விரும்பினேன். நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சமூகத்தை உருவாக்குவதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் நான் நேரடி செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

‘‘இதுவே நான் கடந்த 20 ஆண்டு காலத்தில் அரசியலில் சேர்ந்து சேவையாற்றியதற்குக் காரணம்,’’ என்று முன்னாள் மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

‘‘வெள்ளிக்கிழமை வாக்களிக்கும்போது எனக்கு வாக்களியுங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீங்கள் வாக்களித்தால் அந்த வாக்கு நிலையான எதிர்காலத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்காக இருக்கும்.

‘‘சிங்கப்பூரர்கள் என்ற முறையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்ற ஓர் உணர்வு ஒவ்வொரு தலைமுறையிலும் நிலைத்து இருக்கக்கூடிய ஓர் எதிர்காலத்திற்கு நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்பது பொருள்.

‘‘நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்கு எதிர்காலத்தில் நம்மிடையே ஐக்கியத்தையும் ஆழ்ந்த ஒற்றுமை உணர்வையும் பலப்படுத்துவதாக இருக்கும்,’’ என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

தம்முடைய பரந்த, ஆழ்ந்த அனுபவம்; அனைத்துலக அளவில் தமக்குள்ள நற்பெயர்; நாட்டின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கான இரண்டாவது சாவி என்ற முறையில் அதிபருக்குள்ள பணி; அடித்தள நிலையில் வலுவான பிணைப்பை உருவாக்குவது ஆகிய நான்கு அம்சங்கள் திரு தர்மனின் இறுதிக்கட்ட பிரசாரத்தின் முக்கிய அங்கங்களாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்