அதிபர் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் புதன்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் செய்தனர்.
ஏற்கெனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட அவர்களின் தகவல்கள் 19 வானொலிகளிலும் தொலைக்காட்சியிலும் புதன்கிழமை மாலை ஒலி, ஒளிபரப்பாயின.
டான் கின் லியான்
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான டான் கின் லியான், 75, தனக்கு வாக்களிக்கும்படி சிங்கப்பூரர்களை இறுதிக்கட்ட பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.
தனக்கு வாக்களிப்பதால் நம்பிக்கை மீட்டெடுக்கப்படும். மக்களிடம் நம்பிக்கை பிறக்கும் என்று அவர் தெரிவித்தார்.
என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான், அந்தக் காப்புறுதி நிறுவனத்தில் நிதி நிர்வாகத் துறையில் தான் சாதித்து இருக்கும் சாதனைகளை வலியுறுத்திக் கூறினார்.
‘‘அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் என்ற முறையில் சிங்கப்பூரர்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடுவேன்.
‘‘என்னுடைய நலத்தைவிட மக்களின் நலனையே பெரிதாகக் கருதுவேன். இதன்மூலம் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்த உதவுவேன்,’’ என்று புதன்கிழமை அவர் தனது பிரசாரத்தில் தெரிவித்தார்.
நாட்டின் சேமிப்பை பாதுகாக்க அறிவும் அனுபவமும் தேவை;
தொடர்புடைய செய்திகள்
சாதாரண பாமர மனிதனின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம்;
முன்பு தான் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுகளில் எதையாவது ஏற்புடையதில்லை என்று யாராவது கருதி இருப்பார்களேயானால் அவர்களிடத்தில் மன்னிப்பு;
அரசாங்கத்துடன் செயல்பட்டு மக்களுடைய கருத்துகளை அரசாங்கத்திடம் எடுத்துரைத்து மக்களின் வாழ்க்கையைச் சிறந்ததாக மாற்ற வழி காண்பது ஆகிய நான்கு அம்சங்களும் திரு டானின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் முக்கிய அங்கங்களாக இருந்தன.
தர்மன் சண்முகரத்னம்
வேட்பாளர்களில் மற்றொருவரான திரு தர்மன் சண்முகரத்னம், தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தன்னுடைய அனைத்துலக புகழையும் அனுபவத்தையும் கொண்டு அதிபர் பதவியை திறம்பட ஆற்றப்போவதாகத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியில் கட்சி அடிப்படையில் வேறுபட்டு செயல்படுவது ஒரு போதும் தன்னுடைய நோக்கமாக இருந்தது கிடையாது என்று அவர் கூறினார்.
தான் அப்படி செயல்பட்டு இருந்தால் அது வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்குச் சிறந்த ஆதரவைப் பெற்று தருவதற்காகத்தான் இருக்கும் என்று அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தெரிவித்தார்.
‘‘அடித்தள நிலையில் தீவிரமாக தொண்டாற்ற விரும்பினேன். நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சமூகத்தை உருவாக்குவதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் நான் நேரடி செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
‘‘இதுவே நான் கடந்த 20 ஆண்டு காலத்தில் அரசியலில் சேர்ந்து சேவையாற்றியதற்குக் காரணம்,’’ என்று முன்னாள் மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
‘‘வெள்ளிக்கிழமை வாக்களிக்கும்போது எனக்கு வாக்களியுங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீங்கள் வாக்களித்தால் அந்த வாக்கு நிலையான எதிர்காலத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்காக இருக்கும்.
‘‘சிங்கப்பூரர்கள் என்ற முறையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்ற ஓர் உணர்வு ஒவ்வொரு தலைமுறையிலும் நிலைத்து இருக்கக்கூடிய ஓர் எதிர்காலத்திற்கு நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்பது பொருள்.
‘‘நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்கு எதிர்காலத்தில் நம்மிடையே ஐக்கியத்தையும் ஆழ்ந்த ஒற்றுமை உணர்வையும் பலப்படுத்துவதாக இருக்கும்,’’ என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.
தம்முடைய பரந்த, ஆழ்ந்த அனுபவம்; அனைத்துலக அளவில் தமக்குள்ள நற்பெயர்; நாட்டின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கான இரண்டாவது சாவி என்ற முறையில் அதிபருக்குள்ள பணி; அடித்தள நிலையில் வலுவான பிணைப்பை உருவாக்குவது ஆகிய நான்கு அம்சங்கள் திரு தர்மனின் இறுதிக்கட்ட பிரசாரத்தின் முக்கிய அங்கங்களாக இருந்தன.
இங் கொக் சொங்
அதிபர் தேர்தலில் அரசியல் கட்சி சாராத வேட்பாளர் தான் ஒருவர் மட்டுமே என்று அத்தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளரான இங் கொக் சொங் தனது இறுதிக்கட்ட பிரசாரத்திலும் தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்து அதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் எழுச்சியை நிலைநாட்டும்படி சிங்கப்பூரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரின் அதிபர் அரசியல் கட்சியைச் சாராதவராக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
இருந்தாலும்கூட அரசியல் தலைவர்கள் தங்களுடைய கட்சியில் இருந்து விலகிக்கொண்டு ஒரு சில மாதங்களுக்குப் பிறகே கூட தேர்தலில் போட்டியிட இப்போதைய அதிபர் தேர்தல் முறை அனுமதித்து இருக்கிறது என்று ஜிஐசி நிதியத்தின் முன்னாள் முதலீட்டுத் துறை தலைமை அதிகாரியான திரு இங் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இதர இரண்டு வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியான் இருவரும் அரசியல் கட்சிகளுடன் அணுக்கத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
‘‘அந்த இருவரில் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தும் ஆளும் கட்சியில் இருந்தும் சில மாதங்களுக்கு முன்புதான் விலகிக்கொண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
‘‘மற்றொரு வேட்பாளருக்கான பிரசாரத்தில் எதிர்த்தரப்பு தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
‘‘நான் மட்டும்தான் அரசியல் கட்சியைச் சாராத வேட்பாளர். எந்தவோர் அரசியல் கட்சியோடும் எந்தவொரு காலத்திலும் நான் சேர்ந்து இருந்தது கிடையாது,’’ என்று திரு இங், 75, பிரசாரம் செய்தார்.
அரசியல் சாராத அதிபரைக் கொண்டிருப்பது முக்கியமானது; சிங்கப்பூரில் அரசியல் மிகவும் போட்டி நிறைந்ததாக ஆகி இருக்கிறது. இதனால் தவறான ஒரு குழு பொறுப்புக்கு வந்துவிடக்கூடிய ஆபத்து அதிகரித்து இருக்கிறது;
அரசமைப்புச் சட்ட உணர்வை தூக்கிப்பிடிக்கக்கூடிய காலம் கனிந்து இருக்கிறது;
அரசியல் சாராத ஆற்றல்மிகுந்த சிங்கப்பூரர்களுக்கு விசுவாசமான வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னுதாரணமாக தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ஆகிய நான்கு அம்சங்களும் திரு இங்கின் கடைசிக்கட்ட பிரசாரத்தில் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.

