பள்ளியில் சொந்த சாதனம் பயன்படுத்த கிண்டர்லேண்ட் தடை

2 mins read
08ac0cb8-d03c-4e92-a088-41d9892fb306
768 உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள கிண்டர்லேண்ட் பாலர் பள்ளி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பாலர் பள்ளி நடத்தும் கிண்டர்லேண்ட், தனது அலுவலர்கள் வேலையின்போது சொந்த சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து உள்ளது. பள்ளிக் குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்தத் தடை விதிக்கப்படுவதாக அது தெரிவித்து உள்ளது.

அண்மையில், தனது உட்லண்ட்ஸ் மார்ட் மற்றும் சுவா சூ காங் பாலர் பள்ளி நிலையங்களில் குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்தும் காணொளிகள் வெளியாகி பரவியதைத் தொடர்ந்து கிண்டர்லேண்டின் நடவடிக்கை வெளிவந்து உள்ளது.

பரவலாக வெளியிடப்பட்ட உட்லண்ட்ஸ் மார்ட் பாலர் பள்ளி ஆசிரியரின் துன்புறுத்தல் அடங்கிய காணொளியை தாமே பதிவு செய்ததாக கிண்டர்லேண்டின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் சிஎன்ஏவிடம் தெரிவித்து இருந்தார்.

பள்ளியில் வேலை செய்வோர் தங்களது சொந்த சாதனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டு உள்ள தடை, விழிப்புணர்வு எச்சரிக்கையைத் தடுக்கும் நோக்கம் கொண்டது அல்ல என்று கிண்டர்லேண்ட் வியாழக்கிழமை காலை சிஎன்ஏவிடம் கூறியது.

குழந்தைகளை படமாகவோ காணொளியாகவோ எடுக்க நிறுவனத்தின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் உத்தரவு, அலுவலகப் பணிகளுக்குச் சொந்த சாதனங்களைப் பயன்படுத்தும் மனப்போக்கைக் குறைக்கும் என்று தான் நம்புவதாகவும் அது குறிப்பிட்டது.

“வேலையிடத்தில் வேலை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு சொந்த சாதனங்களைத் தவிர்த்து அலுவலக சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” என்று கிண்டர்லேண்ட் தெளிவுபடுத்தியது.

இருப்பினும், இந்நடவடிக்கை சொந்த கைப்பேசி பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதோ எச்சரிக்கை விழிப்புணர்வு எழுப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதோ கிடையாது என்றும் அது தெரிவித்தது.

குழந்தைகளின் தனியுரிமை மீதான கவலை எழுந்ததைத் தொடர்ந்து நிறுவனம் தனது கொள்கையை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வந்துள்ளதாக கிண்டர்லேண்ட் கூறியது.

சொந்த சாதனம் பயன்படுத்துவதற்கான தடையை கிண்டர்லேண்ட் புதன்கிழமை மாலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டது. பெற்றோரைத் தொடர்புகொள்ளவும் நிறுவனத்திடம் சாதனங்கள் உள்ளதாக அந்தப் பதிவில் அது குறிப்பிட்டது.

பாலர் பள்ளி நிர்வாகத்தின் கைப்பேசிச் செயலியில் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பான படங்களும் காணொளிகளும் வெளியிடப்படுவதாக கிண்டல்லேண்ட் கூறியது.

குறிப்புச் சொற்கள்