அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பலமுறை மதுபானம் விற்றதற்காக லிட்டில் இந்தியாவில் இயங்கும் கடை ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
எண் 662 பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள ஃபேர்வே மார்ட், 2021 டிசம்பர் 5ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் சனிக்கிழமையும் பொது விடுமுறை நாளிலும் இரவு 7 மணிக்குப் பிறகு நால்வருக்கு மதுபானம் விற்றது கண்டறியப்பட்டது.
மதுபானக் கட்டுப்பாடு (விநியோகம் மற்றும் உட்கொள்ளுதல்) சட்டத்தின்கீழ், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு மதுபானம் விற்ற குற்றத்தை அக்கடையின் பிரதிநிதி ஒருவர் ஒப்புக்கொண்டார்.
ஃபேர்வே மார்ட், 2021 நவம்பர் 9ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதிவரை மதுபானம் விற்பதற்கான உரிமம் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கடையில் சோதனை நடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அக்கடை ஊழியர் மதுபானம் விற்றதைக் கவனித்தார். அதையடுத்து அவர் புகார் செய்தார்.
ஃபேர்வே மார்ட், முன்னதாக பிரதீப் இண்டர்நேஷனல் டிரேடிங் என்ற பெயரில் இயங்கியது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பிரதீப் இண்டர்நேஷனல் டிரேடிங் பெயரில் மதுபான உரிமத்தை 2020ல் அந்தக் கடை இழந்தது.
இந்நிலையில், அபராதம் செலுத்த ஃபேர்வே மார்ட் கடைக்கு செப்டம்பர் 12ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.