சிங்கப்பூரின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், ஆணை பெற்ற கழகங்கள், அறப்பணி அமைப்புகள் ஆகியவற்றின் நிர்வாக சபைகளில் இடம்பெற்று இருக்கின்ற மாதர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
இருந்தாலும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள சிங்கப்பூரின் தலைசிறந்த 100 நிறுவனங்களில் மாதர்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து பின்னணியிலேயே இருந்து வருகிறது.
இத்தகைய 100 நிறுவனங்களின் நிர்வாக சபைகளில் மாதர் ஈடுபாடு 2018 டிசம்பர் நிலவரப்படி 15.2% ஆக இருந்தது. இது 2023 ஜூன் மாத நிலவரப்படி 22.7% ஆக அதிகரித்து இருக்கிறது.
‘பன்மய நிர்வாக சபை மன்றம்’ என்ற அமைப்பு வெளியிட்ட இடையாண்டு புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது.
வரும் 2025வது ஆண்டு வாக்கில் மாதர் ஈடுபாட்டு விகிதத்தை 25% ஆக ஆக்க வேண்டும். என்ற இலக்கை நோக்கி முன்னேற்றம் இடம்பெற்று வருகிறது.
அதேவேளையில், அத்தகைய 100 நிறுவனங்களில் 13ன் நிர்வாக சபைகளில் அனைவருமே ஆண்களாக இருக்கும் நிலை தொடர்கிறது.
பொதுத் துறையைப் பார்க்கையில், சிங்கப்பூரின் ஆணை பெற்ற கழகங்களில் பெண்களின் விகிதாச்சாரம் 2023 ஜூன் மாத நிலவரப்படி 32% ஆக இருந்தது.
சிங்கப்பூரில் செயல்படும் ஆகப் பெரிய 100 அறப்பணி அமைப்புகளைப் பார்க்கையில், அவற்றின் நிர்வாக சபைகளில் பெண்களின் ஈடுபாட்டு அளவு 29.5% ஆக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த மன்றத்தின் ஐந்தாவது ஆண்டுவிழா நிகழ்ச்சியும் கருத்தரங்கும் ஷங்ரிலா ஹோட்டலில் வியாழக்கிழமை நடந்தது.
அதில் சமுதாய, குடும்ப மேம்பாடு, உள்துறை துணை அமைச்சர் திருவாட்டி சுன் சூவெலினுடன் அதிபர் ஹலிமா யாக்கோப் 30 நிமிடம் உரையாடினார்.
நிச்சயமில்லாத, சிக்கலான காலகட்டத்தைச் சமாளிக்க நிர்வாக சபைகளில் பெண்களின் ஈடுபாட்டை அதிகப்படுத்தும்படி நிறுவனங்களுக்கும் அறப்பணி அமைப்புகளுக்கும் அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.
சிங்கப்பூர் நிறுவனங்கள், அமைப்புகளின் நிர்வாக சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வியாழக்கிழமை அந்த நிகழ்ச்சி நடந்தது.
சிங்கப்பூரின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களையும் ஆணை பெற்ற கழகங்களையும் நாட்டின் ஆகப் பெரிய 100 அறப்பணி அமைப்புகளையும் பிரதிநிதிக்கும் 160 நிர்வாக சபை தலைவர்கள், நிர்வாக சபை இயக்குநர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பன்மய நிர்வாக சபை மன்றம் 2019ல் அமைக்கப்பட்டது. அதில் 17 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் நியமிக்கிறார்.

