கொவிட் தொற்றுடன் திரும்பத் திரும்ப வெளியே சென்ற ஆடவருக்குச் சிறை

2 mins read
e18d09d3-5bc3-4200-9840-a59b9e071405
-

கொவிட்-19 தொற்றியிருப்பதாக உறுதி செய்யப்பட்ட பிறகும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்த 52 வயது ஆடவருக்குப் புதன்கிழமை ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபிரீஃபார்ம் சொலு‌ஷன் நிறுவனத்தின் இயக்குநரும் பங்குதாரருமான மார்க் சிங் சின் ஜூ, தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

சிங் 2021 ஆண்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், 2022 பிப்ரவரி 22ஆம் தேதி அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அவர் ஆண்டிஜன் விரைவுப் பரிசோதனை செய்து பார்த்தபோது தொற்று இல்லை எனக் காட்டியது.

மறுநாள் தொண்டை புண்ணாக இருந்ததால் மறுபடியும் தனது அலுவலகத்தில் பரிசோதித்துப் பார்த்தபோது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அப்போதிருந்த விதிமுறைகளின்படி, சிங் மார்ச் முதல் தேதி வரை தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆனால், பிப்ரவரி 24 அன்று, அவர் பொதுப் போக்குவரத்தில் அலுவலகத்திற்குச் சென்றார். அதோடு, பல்வேறு இடங்களுக்குப் பொருள்களை எடுத்துச்சென்று கொடுத்தார்.

அதற்கடுத்த நாளும் அவர் வேலையிடத்திற்குப் பொதுப் போக்குவரத்தில் சென்றார். அன்று வீடு திரும்பியபின், முகக்கவசம் அணியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்டதால், அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், அவர் தனது அலுவலகத்திற்கும், அங்கிருந்து செந்தோசாவுக்கும் சென்றார்.

மார்ச் 1 வரை, மேலும் நான்கு முறை சிங் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்