தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி நண்பர் மோசடிகளில் $15.7 மில்லியன் இழப்பு

2 mins read
eb0475c5-12ad-4b49-a5fe-c98e375e2624
கோப்புப்படம் - ஊடகம்

இந்த ஆண்டில் மட்டும், சுமார் 4,800 பேர் தங்களது நண்பர்களை அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களைப் போல் பாசாங்கு செய்த மோசடிக்காரர்களை நம்பி குறைந்தது $15.7 மில்லியன் பணத்தைப் பறிகொடுத்துவிட்டனர்.

இந்த மோசடிக்காரர்கள் தொலைபேசிவழி அல்லது குறுந்தகவல்வழி தொடர்புகொண்டு, நண்பர்களை அல்லது தெரிந்தவர்களைப் போல் பாசாங்கு செய்து, பண உதவி கேட்பார்கள் எனக் காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

மோசடிக்குக் குறி வைக்கப்படுவோர், தெரியாத தொலைபேசி எண்களிலிருந்து குறுந்தகவல், தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் அழைப்பைப் பெறுவார்கள். அந்த எண்களில் “+65” இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

இவ்வாறு தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், தன்னை ஒரு நண்பர் அல்லது தெரிந்தவர் எனச் சொல்லிக்கொண்டு, உண்மையான பெயரை ஊகிக்கச் சொல்வார்.

மோசடிக்காரரிடம் ஏதாவதொரு நண்பரின் பெயரைச் சொன்னவுடன், அவர்தான் நான் என்று மோசடிக்காரர் சொல்லிக்கொண்டு, தொடர்பு விவரங்களைச் சேமித்து வைக்கச்சொல்வார்.

பின்னர், வங்கி பரிவர்த்தனையில் பிரச்சினைகள் இருப்பதாக அல்லது பணத் தட்டுப்பாடு இருப்பதாகச் சொல்லி மோசடிக்காரர் கடன் கேட்பார். உள்ளூர் வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்புமாறு மோசடிக்காரர் சொல்வார்.

கடன் கொடுத்தவருக்குப் பணம் திரும்பக் கிடைக்காதபோது அல்லது உண்மையான நண்பருடன் தொடர்புகொண்ட பிறகுதான் மோசடிக்கு உள்ளானது தெரியவருகிறது.

வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகளைப் பெறும்போது, மாற்று வழிகளில் அதை உறுதி செய்து கொள்ளுமாறும், சந்தேகத்திற்குரிய எண்களை வாட்ஸ்ஆப்பில் புகார் செய்யுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

அதோடு, ScamShield செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் வலியுறுத்துகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தகைய மோசடிக்கு உள்ளாகி, கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வெள்ளியை இழந்துவிட்டனர்.

சென்ற ஆண்டு, 2,106 போலி நண்பர் மோசடிகளில் குறைந்தது $8.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.. பணத்தை இழந்தவர்களில் 46 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இதுபோன்ற குற்றங்களைப் பற்றி தகவல் அளிக்க விரும்புவோர் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness இணையத்தளத்தின்வழி புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்