போலி மருத்துவச் சான்றிதழ்: முன்னாள் தேசிய சேவையாளருக்கு நன்னடத்தை கண்காணிப்பு

2 mins read
dd26d6c6-4505-4ab0-a903-d132b5eea95e
குற்றச்செயல் - படம்: பிக்ஸாபே

சிங்கப்பூர் காவல்துறையில் சேவையாற்றிய முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், தனது நண்பரின் மனைவியிடம் வாங்கிய போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை மேலதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

தனது கடமைகளைத் தவிர்க்கவும் ஃபுட்பாண்டா உணவு விநியோக ஓட்டுநராக வேலை செய்யவும் 21 வயது முகமது அயூப் முகமது ரஃபி இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய சேவையைப் பூர்த்தி செய்த அயூப்புக்கு 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி, அவர் தினமும் இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணி வரை வீட்டில் இருப்பதோடு, 60 மணிநேரம் சமூகச் சேவை செய்யவேண்டும்.

அவரது நண்பரின் மனைவியான 27 வயது சிட்டி சியாஹிண்டா முகமது இஸ்கண்ருக்கு, போலி மருத்துவச் சான்றிதழ்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக முன்னதாகப் பத்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அயூப் சிட்டியிடம் இருமுறை போலி மருத்துவச் சான்றிதழ்களை வாங்கி தனது மேலதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். அந்தச் சான்றிதழ்களை $10 முதல் $15 வெள்ளிக்கு சிட்டி விற்பனை செய்தார்.

உட்லண்ட்சில் இருக்கும் நூஹெல்த் மருத்துவ நிலையத்தின் மருத்துவர் கொடுக்கும் சான்றிதழ்களைப்போல் போலி சான்றிதழ்களை அவர் தயாரித்தார்.

அயூப்பின் மேலதிகாரிகள் மருத்துவரின் கையொப்பம் வெவ்வேறாக இருப்பதைக் கவனித்து, மருத்துவ நிலையத்தில் விசாரித்தபோது, உண்மை வெளிவந்தது.

அயூப் தனது சகோதரரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஃபுட்பாண்டா உணவு விநியோகிப்பாளராகப் பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்