ஆசிரியர்களுக்கான அதிபர் விருதுகள் 2023

5 mins read
aba41098-a78d-48cb-b496-8e5060c9cf47
திருவாட்டி மாலினி தியாகேசன் - படம்: திருவாட்டி மாலினி தியாகேசன்
மாணவர்களுடன் திருவாட்டி மாலினி தியாகேசன்
மாணவர்களுடன் திருவாட்டி மாலினி தியாகேசன் - படம்: திருவாட்டி மாலினி தியாகேசன்
திரு ஷாகுல் ஹமீது குத்துபுதீன்
திரு ஷாகுல் ஹமீது குத்துபுதீன் - படம்: திரு ஷாகுல் ஹமீது குத்துபுதீன்

தலைசிறந்த எட்டு கல்வியாளர்கள் இவ்வாண்டிற்கான ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்ற வருடாந்திர ஆசிரியர் தின வரவேற்பு விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப் இவ்விருதுகளை வழங்கினார்.

 ஆசிரியப் பணி சாதாரண ஒரு வேலையன்று என்றும் மாணவர்களிடத்தில் அறிவைப் புகட்டுவதோடு வாழ்வியல் விழுமியங்களையும் கற்றுத்தந்து சவால்மிகுந்த எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்றும் அதிபர் ஹலிமா ஆசிரியர்களுக்கு புகழாரம் சூட்டினார். 

யாம் பெற்ற ஊக்கம் பெறுக எம் மாணவர்கள் 

“இளம்வயதில் எனக்கு தன்னம்பிக்கையூட்டி என் திறமைகளை வெளிக்கொணர பக்கபலமாய் இருந்த என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரைப் போலவே பல மாணவர்களுக்கு நானும் வழிகாட்டியாக இருக்க இத்துறையை தேர்ந்தெடுத்தேன்,” என்று கூறினார் இவ்வாண்டின் ஆசிரியர்களுக்கான அதிபர் விருதுபெற்ற திருவாட்டி மாலினி தியாகேசன், 44. 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் துறையில் பணியாற்றிவரும் வரும் இவர், பயன்முறை அறிவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.   

இவருடைய 8வது வயதில் ‘விடிலைகோ’ எனும் ஒரு வகை தோல் சம்பந்தப்பட்ட நோயினால் இவர் பாதிக்கப்பட்டிருப்பது  தெரியவந்தது. தோலில் வெள்ளைத் தழும்புகள் போல உருவாகும் இந்நோயினால் திருவாட்டி மாலினி தன்னம்பிக்கையை இழந்தார். தன்னைக் காண்போரெல்லாம் இதைப் பற்றி வினவியதால் முடிந்த வரை தன் நட்பு வட்டத்தைச் சுருக்கிக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

மேடைப்பேச்சுகளில் அதிக ஆர்வமுடையவர் திருவாட்டி மாலினி. ஆனால் மேடையேறினால் தன்னுடைய தோற்றத்தை வைத்து கேலி செய்வார்கள் என்ற எண்ணத்திலேயே தன் திறமையை வெளிக்காட்டாமல் இருந்தார். அச்சூழலில் இவருடைய உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமதி குமார் இவர் நிலையை உணர்ந்து இவருக்கு துணையாக இருந்தார்.  

பேச்சுப் போட்டி, விவாதப் போட்டி என பல்வேறு பேச்சுத் திறன் சார்ந்த போட்டிகளுக்கும் பயிலரங்குகளுக்கும் மாலினியை அனுப்பி வைத்தார். அழகு என்பது ஒருவரின் திறன் சார்ந்தது, தோற்றம் சார்ந்தது அல்ல என்று ஆசிரியர் கூறிய அறிவுரை, இன்றளவும் மனத்தில் இருந்து நீங்கவில்லை என்று பகிர்ந்துகொண்டார் திருவாட்டி மாலினி. 

ஆய்வாளர் ஆக வேண்டும் என்ற தன் இளம் வயது ஆசைக்காக சில காலம் ஆய்வகத்தில் இவர் பணியாற்றினாலும் இவருடைய மனம் வகுப்பறையைச் சுற்றியே வந்தது. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தொடக்கக் கல்லூரி ஆசிரியர் என்று பயணித்த இவர், 2011ஆம் ஆண்டு முதல் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பணியாற்றி வருகிறார். 

ஆசிரியப் பணியில் பல மனத்திற்கினிய அனுபவங்களைத் தான் பார்த்ததாக கூறும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் சிறப்புத் தேவையுடைய ஒரு மாணவி ஊக்கமின்றி தடுமாறுவதைக் கண்டறிந்தார். டிஸ்லெக்சியா, ஏடிஎச்டி குறைபாடுகளுடைய அந்த மாணவி பேச்சிலும் தலைமைத்துவ பண்புகளிலும் தனித்திறன் பெற்றிருந்தாலும் தன் குறைபாடுகளை மட்டுமே முன்னிறுத்தி தனிமையில் இருந்தார். 

தன்னிடம் அந்த மாணவி பயின்ற மூன்றாண்டுகளில் பல்வேறு கல்வி மற்றும் கல்வி சாரா புத்தாக்க முயற்சிகள் மூலம் அவரை மெருகேற்றினார் திருவாட்டி மாலினி. இவரின் உந்துதலால் பல போட்டிகளில் பங்கெடுத்த அந்த மாணவி, 2020ஆம் ஆண்டிற்கான ஹார்வர்ட் புத்தகப் பரிசையும் பெற்றார். தற்போது நியூசிலாந்தில் மருத்துவம் பயின்று வரும் அந்த மாணவியின் வெற்றிகள் பற்றி எப்போது நினைத்தாலும் மனநிறைவைத்தரும் என்று புன்னகைத்தார் மாலினி.  

இவர் தன்னுடைய 15ஆவது வயதில் தமிழ்முரசு நாளிதழில் பயிற்சி செய்தியாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அன்றைய தமிழ் முரசின் ஆசிரியர் வி.டி. அரசு, எதிர்காலத்தில் சமூகத்திற்கு பயனுள்ள பணியை தாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் என்றாவது ஒருநாள் தமிழ் முரசு நாளிதழே தன்னைப் பேட்டி காணும் என்றும் தன்னை வாழ்த்தி அனுப்பியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் திருவாட்டி மாலினி.

அவர் கூறியது போலவே தற்போது நடப்பது, தன் வாழ்வில் தாம் பொறுப்புணர்வுடன் சமூகத்திற்கு பங்காற்றியிருப்பதைப் பறைசாற்றுகிறது என்றும் இவர் தெரிவித்தார்.  

மேலும் இவர் 2020ஆம் ஆண்டு புத்தாக்க பாடத்திட்ட விருதினையும் 2022ஆம் ஆண்டு உன்னத ஆசிரியர் விருதினையும் கல்வி அமைச்சின் ‘இந்நர்ஜி’ விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்பும் அரவணைப்பும் கூடிய கண்டிப்பே நல்வழிப்படுத்தும் 

அன்பும் அரவணைப்பும் கூடிய கண்டிப்பே மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்று கூறினார் அதிபர் விருது பெற்றுள்ள மற்றோர் ஆசிரியரான திரு ஷாகுல் ஹமீது குத்துபுதீன், 48. 

சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேலாண்மைத் துறை தலைவராக பணியாற்றிவரும் இவர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் துறையில் இருக்கிறார். 

வறுமைச் சூழலில் பிறந்து வளர்ந்த இவர், கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய தந்தையின் அறிவுரையைக் கேட்டு பொறுப்புடன் படித்தார். பதின்ம வயதிலேயே ஆசிரியர் ஆகவேண்டுமென்ற கனவுடன் இருந்த இவர், 1996ஆம்  ஆண்டு தொடக்கக் கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 

பிறகு நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக் கழகத்தில் கல்வித் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளிலும் தொண்டூழிய நிறுவனமான சிண்டாவிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். 

தொழில்நுட்ப காலத்தில் இன்றைய மாணவர்களுக்கு பலதரப்பட்ட விவரங்களும் விரல்நுனியில் கிடைக்கின்றன. இவற்றின் மத்தியில் நேர்மறை விழுமியங்களை மட்டும் மாணவர்களிடம் கொண்டு செல்வது சற்றே சவாலான ஒன்று என்றும் இவர் தெரிவித்தார்.  

சில ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பற்ற தாய் ஒருவரின் நான்கு பிள்ளைகளில் ஒருவரான மாணவர் ஒருவர், அரசாங்க உத்தரவின் பேரில் இவர் பணிபுரியும் பள்ளியில் வந்து இணைந்தார். குடும்பச் சூழல், பொறுப்பற்ற பெற்றோர், பொருளாதார நிலை என பல்வேறு இக்கட்டுகளைச் சந்தித்த அந்த மாணவன் வாழ்வில் பற்றற்ற நிலையில் இருந்தார். 

அதீத கோபத்தால் அடிக்கடி சக மாணவர்களுடன் சண்டைகள், கல்வியில் பின்தங்கிய நிலை போன்றவற்றால் பலமுறை தண்டனைகள் பெற்றார். அச்சூழலில் திரு ஷாகுல் அளித்த அறிவுரைகளும் ஆதரவும் மாணவரின் மனதை நன்முறையில் மாற்றியது. 

கல்வி சாரா பயிற்சிகளில் மாணவரை ஈடுபட வைத்து அவருடைய நேரத்தை நேர்மறையான வழியில் செலவுசெய்ய கற்றுக்கொடுத்தார் திரு ஷாகுல். குறிப்பாக மிதிவண்டி பயிற்சியில் முதல்நிலையில் இருந்த மாணவர் மூன்றே ஆண்டுகளில் துணைப் பயிற்றுவிப்பாளராக ஆகும் அளவிற்கு தேர்ச்சி அடைந்தார். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் கண்டார். 

தற்போது உயர்நிலை நான்கில் படித்துவரும் அந்த மாணவர் பல வகைகளில் பெற்றிருக்கும் தேர்ச்சி தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு ஷாகுல். 

குறிப்புச் சொற்கள்