வைல்ட் வைல்ட் வெட் நீர்ச்சறுக்கில் சறுக்கிய மாதின் முதுகுத் தண்டு எலும்பு முறிந்தது

வைல்ட் வைல்ட் வெட் நீர்ச்சறுக்கில் சறுக்கிய மாதின் முதுகுத் தண்டு எலும்பு முறிந்தது

2 mins read
a5199c62-312f-44d4-9baf-fdfa2bf69eb0
வைல்ட் வைல்ட் வெட் நீர் விளையாட்டுப் பூங்காவில் உள்ள நீர்ச்சறுக்கில் சறுக்கிய 50 வயது மாதின் முதுகுத்தண்டு எலும்பு முறிந்தது.  - படம்: ஷின்மின்

வைல்ட் வைல்ட் வெட் நீர் விளையாட்டுப் பூங்காவில் உள்ள நீர்ச்சறுக்கில் சறுக்கிய 50 வயது மாதின் முதுகுத்தண்டு எலும்பு முறிந்தது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நிகழ்ந்தது.

பாசிர் ரிஸ் டௌன்டவுன் ஈஸ்ட்டில் உள்ள அந்தப் பூங்காவின் ‘சுனாமி’ நீர்ச்சறுக்கில் மகிழ்ச்சியாகச் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்த அந்த மாது, சறுக்கிலிருந்து நீச்சல் குளத்திற்குள் வழுக்கியபோது, முதுகுத் தண்டு எலும்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவரது முதுகுத் தண்டு எலும்புப் பகுதி முறிந்திருந்ததை ஊடுகதிர் படம் காட்டியதாக ‌ஷின் மின் செய்தித்தாள் தெரிவித்தது.

இதுபற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, கடந்த மூன்று ஆண்டுகளில் நீர் விளையாட்டுப் பூங்காவில் பெரிய விபத்துகள் எதுவும் நிகழவில்லை என்று வைல்ட் வைல்ட் வெட் பதிலளித்தது.

இந்தச் சம்பவத்தில், மாது வலியுடன் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, உயிர்க் காப்பாளர் அவரை அணுகி, உடனடியாக மருத்துவ உதவியை அழைத்தார்.

முதுகுத்தண்டு எலும்பு காயம் பற்றி எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் அரவிந்த் குமார் விளக்கமளித்தார். வாரத்தில் சராசரியாக ஒருவர் இதுபோன்ற காயத்திற்குத் தனது மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார்.

ஒருவர் உட்காரும்போது வளைந்து நகர்ந்துகொள்ளும் வகையில் வாலெலும்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவ்வாறு நடக்காதபோது அல்லது நீண்டநேர அழுத்தத்தால் வாலெலும்பு காயப்படலாம்.

வழுக்கலால், விளையாட்டுக் காயங்களால், கடினமான இருக்கைமேல் நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதால் கூட முதுகுத் தண்டு எலும்பு முடிவில் காயம்படலாம்.

இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு டாக்டர் அரவிந்த் ஆலோசனை கூறினார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து