அதிபர் தேர்தல்: இரவு 8 மணி வரை எந்நேரமும் வாக்களிக்கச் செல்லலாம்

2 mins read
c03a4113-4c6e-4f3c-8ce8-b151e884e9ba
கேலாங் சிராய் வாக்களிப்பு நிலையத்தில் காலையில் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 1) அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நாள்.

நாட்டின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுக்க காலை 8 மணி முதல் சிங்கப்பூரர்கள் வாக்களித்து வருகின்றனர்.

முன்னதாக, சில வாக்களிப்பு நிலையங்களில் காலை நேரத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க நேரிட்டதால், பிற்பகலில் வாக்களிக்கச் செல்லுமாறு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

“இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்பதால், பின்னேரத்தில், குறிப்பாக பிற்பகலில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்படி வாக்காளர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. பிற்பகலில் வாக்களிப்பதற்கான வரிசை குறைவாக இருப்பது வழக்கம். இதன் தொடர்பில் வாக்காளர்கள் பொறுமையுடன் இருக்கும்படியும் அவர்களின் புரிதலையும் வேண்டுகிறோம்,” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பின்னர் முற்பகல் 11 மணியளவில், பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் காலை நேர நெரிசல் சீராகிவிட்டதால், வாக்காளர்கள் இரவு 8 மணிக்குள் எந்நேரமும் வாக்களிக்கச் செல்லலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது.

தீவு முழுவதும் அமைந்திருக்கும் பல்வேறு வாக்களிப்பு நிலையங்கள், காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பாகவே வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 307இன் கீழ்த்தளத்தில் கிட்டத்தட்ட 100 பேர் வரிசையில் நின்றிருந்தனர். சிராங்கூனில் உள்ள யாங்செங் தொடக்கப் பள்ளியில் காலை 8.10 மணிக்கு 40 முதல் 60 வாக்காளர்கள் வரை வாக்களிக்கக் காத்திருந்ததைக் காண முடிந்தது.

குவோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலைப் பள்ளியில், காலை 9 மணியளவில் ஏறத்தாழ 200 பேர் வரிசையில் காத்திருந்தனர்.

தோ பாயோ, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, காத்தோங் சமூக மன்றம், பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் உள்ள புளோக் 533 போன்ற வாக்களிப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் நின்றிருப்பதைக் காண முடிந்தது.

குவோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலைப் பள்ளி, பாலஸ்தியர் ரோட்டில் உள்ள கல்வி அமைச்சின் தலைமையகம் போன்றவற்றில் வாக்களிப்பு நடைமுறை தாமதமானதாகக் கூறப்பட்டது.

வாக்காளர்கள் சிலர், குறைந்தது 40 நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்ததாகவும் வாக்காளர் பதிவு முறையில் சிக்கல் இருந்ததாகவும் கூறினர்.

அடையாள அட்டையைச் சரிபார்க்கும் இயந்திரம் அதற்கு வெகு நேரம் எடுத்ததாகவும் அத்தகைய இரண்டு இயந்திரங்கள் மட்டுமே இருந்ததாகவும் காத்தோங் சமூக மன்றத்தில் வாக்களித்த சிலர் கூறினர். இது குறித்த மேல்விவரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தேர்தல் துறையை நாடியுள்ளது.

ஜிஐசி முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியான் ஆகியோர் இந்த அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வாக்களிக்க  2,709,407 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 85 விழுக்காட்டு வாக்காளர்கள் அதாவது 2,302,996 பேர் வாக்களித்துவிட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்