ஹாங்காங்கில் வசிக்கும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சவோலா சூறாவளி அந்நகரை நெருங்கும் வேளையில், வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்காளர்கள் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் பாதுகாப்பை முன்னிட்டு, வானிலை குறித்து உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் ஆலோசனையைச் செவிமடுத்து அதற்கேற்ப வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லத் திட்டமிடும்படி வாக்காளர்களை சிங்கப்பூர் தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாட்டு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்போர் இரவு 8 மணிக்குள் வாக்களிக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நேரம் முடியும் தருவாயில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே வாக்களிக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சூறாவளி நகரை நெருங்குவதால் வாக்களிக்க வெளியில் செல்ல வேண்டாமென முடிவு செய்யும் சிங்கப்பூரர்கள், தங்கள் பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் மீண்டும் பதிவு செய்ய, தேர்தல் துறையை அணுகும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அவர்கள் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் மீண்டும் சேர்க்கப்பட்ட பிறகு, எதிர்காலத் தேர்தல்களில், தகுதிபெறுவோர் தொடர்ந்து வாக்களிக்க இயலும்.
ஹாங்காங், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு ‘சவோலா’ சூறாவளி தொடர்பான 8ஆம் எண் எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனாவும் அச்சூறாவளி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சூறாவளியால் மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

