நிறுவனங்களுக்கு அபராதம், முன்னாள் இயக்குநர்களுக்குச் சிறை

நிறுவனங்களுக்கு அபராதம், முன்னாள் இயக்குநர்களுக்குச் சிறை

2 mins read
b0394b6a-c4e3-4dcf-a6c3-048c011a0c9a
எம்இஎஸ் குழுமம் - கோப்புப் படம்

பல்வேறு வேலை வாய்ப்புக் குற்றங்களுக்காக எம்இஎஸ் குழுமத்தின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களுக்கும் அவற்றின் முன்னாள் இயக்குநர்கள் நால்வருக்கும் அபராதமும் சிறைத்தண்டனையும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சினால் விசாரிக்கப்பட்ட பொய்யான தகவல்களை உறுதிகூறியது தொடர்பான “மிகப்பெரிய, மிக விரிவான வழக்கு” இது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

2009 முதல் 2019 வரை நடந்த இந்த மோசடி காரணமாக, தளவாடங்கள், சொத்துச் சந்தைத் துறை நிறுவனமான எம்இஎஸ் குழுமத்தின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்கள் தகுதி பெற்றதைவிட அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிந்துள்ளதாக அமைச்சின் அறிக்கை கூறியது.

இதன் விளைவாக, நிறுவனங்கள் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டியுள்ளன. உதாரணமாக, நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களை நிர்வகிக்கும் லேபர்ட்டல் $6,225,589 ஈட்டியது. எம்இஎஸ் லாஜிஸ்டிக்ஸ் $4,099,397 ஈட்டியது.

இந்த மோசடி வொர்க் பர்மிட், எஸ்பாஸ் விண்ணப்பங்கள் அல்லது புதுப்பித்தலுடன் இணைக்கப்பட்ட 111 பொய்யான சம்பள தகவல்கள் தொடர்பானது.

வொர்க் பர்மிட், எஸ்பாஸ் வேலை அனுமதி அட்டைகளுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டி காட்டியது குற்றங்களில் ஒன்று. பின்னர் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை திருப்பித் தருமாறு கேட்கப்படுவார்கள்.

இதன்மூலம் திரும்பப் பெற்ற தொகை ஏறக்குறைய, மினி என்வைரன்மண்ட் சர்வீஸ் $1,225,140, ​​லேபர்ட்டல் $508,200, எம்இஎஸ் லாஜிஸ்டிக்ஸ் $78,000 என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மினி என்வைரன்மண்ட் சர்வீசுக்கு $396,500, லேபர்ட்டல் மேனேஜ்மெண்ட் கார்ப்பரேஷனுக்கு $120,000, எம்இஎஸ் லாஜிஸ்டிக்சுக்கு $59,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தளவாடங்கள், சொத்துச் சந்தைத் துறைகளில் இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன, லேபர்ட்டல் நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களை நிர்வகிக்கிறது.

தண்டனைகளைத் தொடர்ந்து, தங்குமிடங்களின் நிர்வாகத்தை புதிய நடத்துனர்களிடம் லேபர்ட்டல் ஒப்படைக்கும்.

முகமது ஜின்னா முகமது அப்துல் ஜலீலுக்கு 42 வாரச் சிறையும், 48,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 192 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பர்விஸ் அஹமட் முகமது கவுஸுக்கு 35 வாரச் சிறைத்தண்டனையும் $42,500 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 170 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சியூ செயின் லூனுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான, லேபர்ட்டலின் முன்னாள் இயக்குனர் ஹாஜா நவாஸுக்கு நான்கு மாதம் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்று நிறுவனங்கள், நான்கு தனிநபர்கள் மீது மார்ச் 2021ல் குற்றங்கள் சுமத்தப்பட்டன.

குற்றங்கள் கண்டறியப்பட்டது முதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. 2019ல் எம்இஎஸ் குழும நிறுவனங்களில் சட்டவிரோத குற்றச்செயல்களை விசாரிக்க அமைச்சு அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டது.

குறிப்புச் சொற்கள்