‘எஸ்-பாஸ்’ புதுப்பிப்புக்குத் தகுதிபெற ஊதிய வரம்பு உயர்வு

‘எஸ்-பாஸ்’ புதுப்பிப்புக்குத் தகுதிபெற ஊதிய வரம்பு உயர்வு

2 mins read
8d3bafb6-0f57-40f3-8a1b-1cad72443c12
எஸ்-பாஸ் அனுமதி அட்டையைப் புதுப்பிப்பதற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பு உயர்வு வெள்ளிக்கிழமை நடப்புக்கு வந்தது. ஆனால் நிறுவனங்களின் செயல்முறையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்-பாஸ் வேலை அனுமதி அட்டையைப் புதுப்பிப்பதற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அது நடப்புக்கு வந்தது.

இருப்பினும் நிறுவனங்களின் செயல்முறையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது.

இது குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதும் ஊழியரணியில் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரைவிட எஸ்-பாஸ் வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இதற்கான காரணங்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய நிறுவனங்கள் கூறின.

இருப்பினும் சில நிறுவனங்களில் அதிகமான எண்ணிக்கையில் எஸ்-பாஸ் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களைத் தக்கவைத்துக்கொள்ள அந்த நிறுவனங்கள் இவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அல்லது, வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரை அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.

நிதித் துறையில் வேலை செய்யும் ஒருவர், எஸ்-பாஸ் அனுமதியைப் புதுப்பிப்பதற்கு, குறைந்தபட்சம் $3,500 சம்பளம் பெறவேண்டும். முன்னர் அது $2,500 ஆக இருந்தது. மற்ற துறைகள் அனைத்திலும் குறைந்தபட்சம் $3,000 ஊதியம் பெற்றால்தான் புதுப்பிக்க இயலும்.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி புதிய எஸ்-பாஸ் விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச சம்பள வரம்பு உயர்த்தப்பட்டது.

இன்று முதல் (2023 செப்டம்பர் 1) புதிய எஸ்-பாஸ் விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் நிதித் துறையினர்க்கு $3,650ஆகவும் மற்ற துறையினர்க்கு $3,150ஆகவும் உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், கட்டங்கட்டமாக நடப்புக்கு வரும் இந்த உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. நிறுவனங்கள் இதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள அவகாசம் தரும் பொருட்டு கட்டங்கட்டமாக இது நடப்புக்கு வருகிறது.

ஊழியரணிக் கொள்கை மாற்றங்கள் குறித்து மனிதவள அமைச்சு முன்கூட்டியே தகவல் அளித்ததாக சிறிய, நடுத்தர நிறுவனங்களின் சங்கத் தலைவர் கெர்ட் வீ தெரிவித்தார்.

சேவைத்துறை சார்ந்த சிறிய நிறுவனங்கள் இந்த ஊதிய வரம்பு உயர்வால் பாதிக்கப்படும் என்று லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ஹோட்டல் நடத்தும் சிலர் கூறினர். இத்தகையோருக்கு வேலை அனுமதிச் சீட்டு (ஒர்க் பெர்மிட்) வைத்திருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று அவர்கள் கருத்துரைத்தனர்.

வெள்ளிக்கிழமை நடப்புக்கு வந்த புதிய ஊழியரணிக் கொள்கைகளின்கீழ், ‘எம்பிளாய்மெண்ட் பாஸ்’ எனப்படும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களுக்கான ‘காம்பஸ்’ மதிப்பீட்டு முறையிலும் புதிய விதிகள் நடப்புக்கு வந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்