மோசடிக்காகக் கடத்தப்பட்டோரில் நன்கு படித்த சிங்கப்பூரர்களும் அடங்குவர்: ஐநா

1 mins read
0265c779-8781-4f4d-ad0a-f52f1f4afc47
தென்கிழக்காசியாவில் 2016 முதல் சட்டவிரோத இணையச் சூதாட்டம் அதிகரித்து வருவதாக ஐநா அறிக்கை குறிப்பிடுகிறது. - சித்திரிப்பு: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தென்கிழக்காசிய மோசடிக் கும்பல்களுக்காகப் பணிபுரிய கடத்தப்பட்டோரில் சிங்கப்பூரைச் சேர்ந்த, நன்கு படித்தவர்களும் அடங்குவர் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் நிபுணத்துவ வேலைகளில் பணியாற்றியவர்கள். சிலர் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன ஆணையம், ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

லட்சக்கணக்கானோர் இவ்வாறு கடத்தப்படுகின்றனர்.

தென்கிழக்காசியாவில் உள்ள மோசடிக் கும்பல்களுக்குப் பணிபுரியவும் சட்டவிரோத சூதாட்டக் கூடங்களில் பணிபுரியவும் குண்டர் கும்பல்கள் அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன.

பாதிக்கப்பட்டோர், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

தென்கிழக்காசியாவில் 2014ல் முளைவிட்ட சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள், 2016க்குப் பிறகு அதிகரித்துள்ளன.

கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அவை மேலும் அதிகரித்தன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பலரும் வீட்டிலேயே இருந்ததும் இணையத்தில் அதிக நேரம் செலவிட்டதும் அதற்குக் காரணங்கள். மோசடிக் கும்பல்களுக்கு அவர்கள் எளிதில் இலக்காயினர்.

கிருமிப் பரவலால் வேலையிழந்த பலரும் வேலை தேடும் கட்டாயத்தில் இருந்ததை மோசடிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று, கடப்பிதழ்களைப் பறித்துக்கொண்டு, மோசடி நிலையங்களில் பணிபுரியக் கட்டாயப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்