தாதிமை இல்லங்களில் வாக்களிப்பு நிகழ்ந்தது: சிங்கப்பூரில் முதன்முறை

தாதிமை இல்லங்களில் வாக்களிப்பு நிகழ்ந்தது: சிங்கப்பூரில் முதன்முறை

2 mins read
668607d7-f779-45fa-895d-2f2d3b93244c
130 ஹவ்காங் அவென்யூ 1ல் உள்ள தாதிமை இல்லத்தில் நடைபெற்ற வாக்களிப்பு. - படம்: சாவ் பாவ்

தாதிமை இல்லங்களில் படுத்த படுக்கையாக இருப்போரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிங்கப்பூரில் இப்படி ஒரு ஏற்பாடு இந்தத் தேர்தலில்தான் அறிமுகம் கண்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள 31 தாதிமை இல்லங்களில் இருப்போர் வாக்களிக்க வசதியாக நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இந்த அதிபர் தேர்தலின் சிறப்பு அம்சங்களில் இதுவும் ஒன்று.

தங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து தாதிமை இல்லவாசிகள் மகிழ்ச்சியடைந்ததாக எஸ்ஏஎஸ் எனப்படும் வயதான நோயாளிகளுக்கான சங்கத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கீத் கோ கூறினார்.

இச்சங்கத்தின் தாதிமை இல்லத்தில் 360 பேர் உள்ளனர். நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் என்னும் முன்னோடித் திட்டத்தில் இடம்பெற்று உள்ள தாதிமை இல்லங்களில் இதுவும் ஒன்று.

2022ஆம் ஆண்டின் நிலவரப்படி சிங்கப்பூர் முழுவதும் 83 தாதிமை இல்லங்கள் இருந்ததாக சுகாதார அமைச்சு தனது இணையத்தளத்தில் தெரிவித்து உள்ளது.

தாதிமை இல்லங்களில் தங்கி இருப்போரில் பெரும்பாலானவர்கள் நடப்பதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்கள். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிக்க அவர்களை சக்கர நாற்காலிகளில் அமர வைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

பள்ளிக்கூடங்களிலோ சமூக நிலையங்களிலோ ஏற்படுத்தப்பட்டு இருக்கும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இருப்பினும் எல்லாராலும் அவ்வாறு செல்லும் நிலை இல்லை.

அந்த வகையில், எஸ்ஏஎஸ் இல்லவாசிகளில் எத்தனை பேர் அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த முன்னோடித் திட்டத்தில் ஒவ்வொரு தாதிமை இல்லத்திலிருந்தும் 50க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தனர்.

மொத்தம் 4,087 இல்லவாசிகள் வாக்களிக்கும் வசதி பெறுவார்கள் என்று தேர்தல்துறை இதற்கு முன்னர் தெரிவித்து இருந்தது.

எஸ்ஏஎஸ் பலநோக்கு அறையில் அமைக்கப்பட்டு இருந்த வாக்களிப்பு நிலையத்தில் தொடக்கமாக வாக்களித்தோரில் ஒருவர் திருவாட்டி லீ டான் லின், 75. ஐந்தாண்டு காலமாக அந்த தாதிமை இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார்.

வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதைவிட தங்கி இருக்கும் இடத்தில் இருந்தே வாக்களித்தது மிகவும் வசதியாக இருந்தது என்று வாக்களித்த பின்னர் திருவாட்டி லீ தெரிவித்தார். வாக்களிக்கும் நடைமுறைக்கு ஐந்து நிமிடங்களே ஆனதாகவும் இதற்கு முன்னர் பயணம் செய்து வாக்களிப்பு நிலையங்களில் வரிசையில் இருந்து வாக்களிக்க பல மணி நேரம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்