சுமுகமாக நடந்த தேர்தல்; புதிய வசதிகளால் வாக்களிப்பு எளிதானது

சுமுகமாக நடந்த தேர்தல்; புதிய வசதிகளால் வாக்களிப்பு எளிதானது

5 mins read
1a0b3ad9-69b2-40db-8e13-e824636a5dfd
தன்னை திரு எஸ் என்று மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்பிய ஜூரோங் வட்டாரத்தைச் சேர்ந்த இந்த 43 வயது ஆடவர் எலும்பு முறிவு இருந்தாலும்கூட அதையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்களித்து விட்டு மீண்டும் மருத்துவமனைக்கே சென்றுவிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் 9வது அதிபரைத் தேர்ந்து எடுக்க சிங்கப்பூரர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை 1,264 வாக்குச் சாவடிகளில் வாக்கு அளித்தனர்.

வாக்களிக்க தகுதி பெற்றிருந்த மொத்த வாக்காளர்களில் சுமார் 85% விழுக்காட்டினர் அல்லது 2,302,996 சிங்கப்பூரர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் தங்கள் வாக்குகளை அளித்துவிட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்தது.

தொடக்கத்தில் வாக்காளர் பதிவு முறையில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனையடுத்து, வாக்குச்சாவடிகளில் வரிசைகள் நீண்டன. இருந்தாலும் காலை 10 மணியளவில் வாக்களிப்பு நடைமுறை எல்லாம் சுமுகமாக இருந்தது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 307ல் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஏறத்தாழ நூறு பேர் வரிசையில் நின்றிருந்தனர். ஆனால், காலை 9.30 மணிக்கு அங்கு வரிசையில் பத்துப் பேர்கூட இல்லை.

தன்னை திரு எஸ் என்று மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்பிய ஜூரோங் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயது ஆடவர் சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அணிந்திருக்கும் உடையை அணிந்திருந்தார். காலில் கட்டு இருந்தது. முழங்காலில் எலும்பு முறிவு இருந்தாலும்கூட அதையும் பொருட்படுத்தாமல் அவர் தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்களித்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கே சென்றுவிட்டார்.

விஸ்மா கேலாங் செராய் வாக்குச்சாவடியில் பௌத்த துறவிகள் மூவர் உள்ளிட்ட பன்மய வாக்காளர்களும் காணப்பட்டனர். நாடு முழுவதும் செயல்பட்ட வாக்குச்சாவடியில் நண்பகல் நேரத்தில் கூட்டம் குறைந்துவிட்டது.

பல புதிய அம்சங்கள்

வாக்களிப்பு நடைமுறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு தேர்தலில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் அட்டையை எடுத்து வருவதற்குப் பதிலாக வாக்காளர்கள் சிங்பாஸ் செயலி வழியாக தங்களுடைய மின்னிலக்க அடையாள அட்டையை அல்லது மின்னணு வாக்கு அட்டையை வாக்குச்சாவடியில் காட்டி வாக்களித்தனர்.

வாக்குச்சீட்டில் பயன்படுத்தக்கூடிய தானே மையை நிரப்பிக்கொள்ளக்கூடிய எக்ஸ் முத்திரைச் சாதனம் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

காத்தோங் சமூக நிலையத்தில் முதல் முறையாக வாக்களித்த அரோனி சர்க்கார் என்ற 23 வயது மாணவி, வாக்களிப்பு நடைமுறை சுமுகமாக இருந்தது என்று கூறினார்.

மின்னிலக்க முறையில் பிரச்சினை ஏற்பட்டதால் வாக்குச்சாவடி அதிகாரிகள் தன்னுடைய அடையாள அட்டையையும் வாக்காளர் அட்டையையும் சரிபார்த்து தன்னை வாக்களிக்க அனுமதித்ததாக அவர் கூறினார்.

அந்த மாணவி தன்னுடைய பெற்றோருடன் காலை 8.10 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து 30 நிமிடம் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்களிப்பு நடைமுறை ஒழுங்காக, சரளமாக, ஒருமித்த கவனத்துடன் நடந்தது என்றார் அவர்.

அந்த வாக்களிப்பு நிலையத்தில் தன்னுடைய மகன், மகளுடன் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த ஒரு குடும்ப மாது தன்னுடைய பெயரைத் திருவாட்டி நியோ என்று மட்டும் தெரிவித்தார்.

‘‘என்னுடைய அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்க்க இயந்திரம் நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டது. வரிசையும் அதிகமாக இருந்தது. இரண்டே இரண்டு இயந்திரங்கள்தான் இருந்தன. காலையில் சாப்பிடாமல் நாங்கள் சென்றிருந்தோம்,’’ என்றார் அந்த மாது.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையைச் சேர்ந்த முழுநேர வீரரான ஈத்தன் இங், 44, என்பவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முத்திரை சாதனத்தை தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.

தோ பாயோ லோரோங் 5ல் உள்ள புளோக் 63க்கு எதிரே அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு காலை சுமார் 7 மணிக்கே சென்றுவிட்ட திரு இங், மூன்றாவது நபராக அங்கு வாக்களித்தார்.

குட்மேன் ரோட்டில் உள்ள சுங் செங் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் முதல் ஆளாக திரு கதிரிதம்பி ராமகிருஷ்ணன், 74, என்பவர் தம் மனைவி, மகனுடன் நின்றிருந்தார்.

ஓய்வு பெற்றவரான அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முத்திரை சாதனம் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

முதிய வாக்காளர்களுக்கு உதவி

முதிய வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள், வாக்குச்சாவடிகளில் முதன்முதலாக வாக்களித்து விட்டார்கள்.

தோ பாயோ லோரோங் 5ல் செயல்பட்ட வாக்குச்சாவடியில் திரண்டிருந்த முதிய வாக்காளர்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி வழிகாட்டினார்கள்.

வாக்களிக்க வந்திருந்த 86 வயது மாது ஒருவர் சரியாக கண் பார்வை இல்லாததால் தவறாக வாக்களித்துவிட்டார். அவருக்குப் புதிதாக வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சீட்டை ரத்து செய்யப்பட்டதாக அல்லது செல்லுபடியாகாததாக அறிவிக்கும் முத்திரையை அதில் பதித்துவிடுவார்கள்.

அதிகாரிகள் மிகவும் கருணையுடன், பொறுமையுடன் நடந்துகொண்டு தனக்கு வழிகாட்டியதாக அந்த முதிய மாது தெரிவித்தார்.

மக்களை மிகவும் நன்றாக நடத்தக்கூடிய ஒருவர் என்று தான் கருதும் வேட்பாளருக்குத் தான் வாக்களித்ததாக அந்த முதிய மாது கூறினார்.

ஹவ்காங் சென்ட்ரலில் புளேக் 852ல் வாக்களித்த லியூ சன், 71, என்ற ஓய்வு பெற்ற ஒருவர், வாக்காளர் அட்டையில் இருந்த வரிசை எண் யதார்த்தமாக வெட்டுப்பட்டுவிட்டதை அடுத்து மின்னிலக்க தேர்தல் அட்டையைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.

கேலாங் சிராய் சமூக மன்றத்தில் பே ஹோங் சீ என்ற 95 வயது மாது இரண்டே நிமிடங்களில் வாக்களித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இவரை இவருடைய உறவினர் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருந்தார்.

சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தவர்கள் எளிதாக வாக்களிக்கத் தோதாக வாக்களிக்கும் முகப்பின் உயரம் சரியாக அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வாக்குச் சீட்டை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பார்க்க முடிந்தது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முத்திரை சாதனமும் பயன்படுத்த எளிதாக இருந்தது என்று அந்த முதிய மாதின் உறவினர் கூறினார்.

இந்த ஆண்டில் 31 தாதிமை இல்லங்களில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இது தனக்கு மிகவும் வசதியாக இருந்ததாக ஹவ்காங் அவென்யூ 1ல் செயல்படும் முதிய நோயாளிகளுக்கான சங்கம் என்ற இல்லத்தில் வாக்களித்த திருவாட்டி லீ டான் லின், 75, என்பவர் கூறினார்.

வாக்களிப்பு முடிந்ததை அடுத்து அடுத்த அதிபர் யார் என்பதை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குள்ளாகவே சிங்கப்பூரர்கள் கணித்துவிட தோதாக தேர்தல் துறை இணையத்தளத்தில் ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

குறிப்புச் சொற்கள்