அதிபர் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்னம், 66, சாதித்த இமாலய சாதனை சிங்கப்பூர் எங்கும் சனிக்கிழமை விடியற்காலை முதலே வெற்றி முழக்கமாக எதிரொலிக்கத் தொடங்கியது.
முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன், 70.4% வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவர் சனிக்கிழமை சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கு அளித்து இருந்தனர்.
திரு தர்மன் தனது முன்னாள் தொகுதியான ஜூரோங் குழுத்தொகுதியில் தாமான் ஜூரோங்கில் இருந்து மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கத் தொடங்கினார். அதற்கு முன்னதாகவே அங்கு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
ஜூரோங் ஹோங் சான் சீ சங்கத்தைச் சேர்ந்தவர்கள், வெற்றியைக் கொண்டாடும் வகையில் இரண்டு வாகனங்களில் அன்னாசிப் பழங்களைக் கொண்டு வந்து தாமான் ஜூரோங் சந்தை, உணவங்காடி நிலையத்திற்கு வெளியே குவித்து இருந்தனர்.
திரு தர்மனும் அவரின் துணைவியாரான திருமதி ஜென் இட்டோகியும் சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு அங்கு வருகை அளித்தனர்.
திரு தர்மன் தம்பதியர் வந்ததுமே அன்னாசிப் பழங்களை கையில் தூக்கிவைத்துக்கொண்டு மக்கள் அவர்களை வரவேற்றனர்.
திரு தர்மனின் தேர்தல் பிரசார சின்னம் அன்னாசிப் பழம். சுமார் 30 நிமிடம் அங்கு இருந்த திரு தர்மனுடன் பலரும் படம் எடுத்துக்கொண்டனர்.
தாமான் ஜூரோங்கில் ராஜா தாரிக் என்ற குளிர்பானக் கடை நடத்திவரும் திரு முகம்மது ரஃபிக், 53, திரு தர்மனுக்கு மாலை அணிவித்து அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார்.
‘‘திரு தர்மன் இங்கு அடிக்கடி வருவார். ஆனால் இனிமேல் அவர் அதிபராகிவிடுவார். அவரை முன்பு போல் சந்திக்க முடியாது.
‘‘திரு தர்மன் அதிபராவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி அவரை முன்புபோல் அடிக்கடி பார்க்க முடியாது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது,’’ என்று திரு முகம்மது ரஃபிக் தெரிவித்தார்.
அடுத்ததாக மார்சிலிங் கடைத்தொகுதி உணவங்காடி நிலையத்திற்குத் திரு தர்மன் சென்றார்.
அங்கு திரண்டு இருந்தவர்களில் பலரும் பரபரப்பாக ஓடிவந்து திரு தர்மனுக்குக் கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம் எடுத்துக்கொண்டனர். அன்னாசிப் பழங்களைச் சிலர் பகிர்ந்துகொண்டனர்.
மார்சிலிங் கடைத்தொகுதி உணவங்காடி நிலையத்தில் கடை வைத்திருக்கும் திரு டியோ மேன் லாங், 59, என்ற மாது, ‘‘நான் திரு தர்மனுக்கு வாக்களித்தேன்,’’ என்றார்.
‘‘அவரின் சிந்தனை எப்போதுமே சிங்கப்பூரர்களின் நலன்களைப் பற்றியே இருக்கும். அவரால் சிங்கப்பூர் மேலும் புகழ் அடையும்,’’ என்று அந்த மாது கூறினார்.
இதனிடையே, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் திரு தர்மனை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டினார்.
‘‘நாடு என்ற முறையில் சிங்கப்பூரின் ஒற்றுமையைத் திரு தர்மன் மேலும் பலப்படுத்துவதைக் காண நான் விரும்புகிறேன்.
‘‘சிங்கப்பூர் மக்களின் தலைசிறந்த தன்மைகளை அவர் வெளிக்கொணர்வார்.
வெளிநாடுகளில் சிங்கப்பூரின் நலன்களை அவர் பிரதி நிதிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்,’’ என திரு வோங் கூறினார்.
திரு தர்மன் சனிக்கிழமை அவர் தெம்பனிஸ் ஹப் பகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

