லிம் சூ காங் பெருந்திட்டம்; உற்பத்தியைப் பெருக்க உணவு முகவை அமைப்பு வியூகம்

லிம் சூ காங் பெருந்திட்டம்; உற்பத்தியைப் பெருக்க உணவு முகவை அமைப்பு வியூகம்

2 mins read
9411a776-ae64-4bac-ab4f-f96d640f2200
வடக்கு, வடகிழக்கு, தெற்கு ஆகிய தனிப்பட்ட மூன்று பகுதிகளை உள்ளடக்கி சுமார் 390 ஹெக்டர் பரப்பளவில் மொத்த நிலப்பரப்பு அமைந்து இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் 

லிம் சூ காங்கில் பல வேளாண் பண்ணைகள் செயல்படுகின்றன. அந்தப் பகுதி விரைவில் அதிதொழில்நுட்ப மாவட்டமாக உருவாகும்.

காய்கறி, கீரைகள், காளான்கள், மீன் ஆகியவற்றை எந்த பருவநிலையிலும், செலவு சிக்கனமாக உற்பத்தி செய்யக்கூடிய அளவில் பரந்து விரிந்த வேளாண் வட்டாரமாக அந்தப் பகுதி திகழும்.

லிம் சூ காங் பெருந்திட்ட கண்காட்சி சனிக்கிழமை சாஃப்ரா சுவா சூ காங்கில் தொடங்கியது.

சிங்கப்பூர் 2030 ஆவது ஆண்டு வாக்கில் தனக்குத் தேவையான சத்துணவில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே உற்பத்திச் செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

இந்த இலக்கை நிறைவேற்றுவதில் லிம் சூ காங் பெருந்திட்டம் முக்கிய ஒன்றாக இருக்கும்.

நிலத்தை அதிகளவில் பயன்படுத்திக்கொள்வது; கடல் மட்டம் உயர்வதால் பாதிப்பு ஏற்படாத வகையில் பூமிக்குக் கீழே காய்கறிகளை விளைவிப்பது; சூரிய சக்தியைப் பயன்படுத்துவது ஆகியவை சிங்கப்பூர் உணவு அமைப்பு பரிசீலித்து வரும் பல விருப்ப உரிமைகளில் அடங்கும்.

‘எதிர்காலத்திற்கு உணவளித்தல்: அனைவருக்கும் வேளாண்-உணவு மையத்தை உருவாக்குவதல்’ என்ற தலைப்பிலான அந்தக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டு பேசினார்.

சிங்கப்பூருக்குப் போதிய உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய மூன்று உத்திகளை நாடு தொடங்கி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதில் உள்ளூர் உணவுப்பொருள் உற்பத்தியைப் பெருக்குவது ஒன்று என்று திரு வோங் கூறினார்.

உணவுப்பொருள்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளைப் பன்மயப்படுத்துவது, அரிசி, உறைய வைக்கப்பட்ட கோழி, டப்பிகளில் அடைக்கப்பட்ட காய்கறிகள் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருள்களைப் போதிய அளவுக்குச் சேமித்து வைத்துக்கொள்வது ஆகியவை இதர இரண்டு உத்திகள் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் நிலப்பரப்பில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் அளவு 1 விழுக்காடு கூட இல்லை.

இந்த நிலையில், லிம் சூ காங் வட்டாரத்தை அதிக உற்பத்தித்திறன்மிக்க, வளங்களை விவேகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வேளாண்-உணவு குழுமமாக உருமாற்ற சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு பெருந்திட்டத்தைத் தீட்டி இருக்கிறது.

இதன்தொடர்பில் அரசாங்க அமைப்புகள், தொழில்துறைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

வடக்கு, வடகிழக்கு, தெற்கு ஆகிய தனிப்பட்ட மூன்று பகுதிகளை உள்ளடக்கி இருக்கும் லிம் சூ காங் வேளாண் வட்டாரம் சுமார் 390 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.

அந்தப் பெருந்திட்டம் இப்போதைய இயற்கை வளங்களைக் கட்டிக்காத்து அவற்றுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கூடுமானவரை குறைக்கும்.

குறிப்புச் சொற்கள்
காய்கறி