தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரப் பிள்ளைகளுடன் ஓய்வுக் காலத்தை செலவிடத் திட்டம்: டான்

2 mins read
45df886b-949b-425c-a051-3351e249d9cb
செய்தியாளர்களிடம் பேசிய திரு டான் கின் லியான். - படம்: பெரித்தா ஹரியான்

என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான் கின் லியான், அதிபர் தேர்தலில் தான் பெற்ற 13.88 விழுக்காடு வாக்குகளைவிட சிறப்பான வாக்குகளை எதிர்பார்த்ததாகவும், இனிமேல் தனது குடும்பத்தினரின் அறிவுரைப்படி ஓய்வுகாலத்தை அனுபவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திரு டான், எட்டு வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில் வீடு திரும்பும்போது சற்று சோர்வாக காணப்பட்டார்.

முன்னதாக மாலையில், அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் இயோ சூ காங்கில் உள்ள அவரது வீட்டில் தேர்தல் முடிவுகளைக் காணக் கூடியிருந்தனர். ஆனால் தேர்தல் துறை மாதிரி எண்ணிக்கை முடிவை இரவு 10.40 மணிக்கு அறிவித்தபோது அவரது மனநிலை கம்பீரமாகவே இருந்தது. திரு டான் 14% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

இரவு 11 மணிக்குப் பிறகு வீட்டிலிருந்து கிளம்பிய 75 வயதான திரு டான், மாதிரி எண்ணிக்கையில் 70% வாக்குகளைப் பெற்ற திரு தர்மன் சண்முகரத்னத்தை வாழ்த்தினார்.

“சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க அவருக்கு நல்வாழ்த்துகள். அவர் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையைக் கொண்டு வர உதவுவார் என்று நம்புகிறேன்,” என்று தொலைபேசியில் எழுதி வைத்திருந்த குறு அறிக்கையைப் பார்த்து ஆங்கிலம், மாண்டரின், மலாய் மொழிகளில் வாசித்தார்.

“பேரப்பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடப்போகிறேன்,” என்றார் புன்னகைத்தபடியே. உடனிருந்த அவரது 67 வயது மனைவி திருவாட்டி டே சியூ ஹொங் கையசைத்தார்.

“எனது ஓய்வு நேரத்தில், மற்ற வழிகளில் மக்களின் சிரமங்கள், விருப்பங்களுக்காக குரல் கொடுப்பதில் எனது பங்கை தொடர்ந்து ஆற்றுவேன்,” என்று கூறினார்.

முன்னதாக, வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு டான், அதிபர் தேர்தலில் போட்டியிட்டது “ஒரு பயனுள்ள அனுபவம்,” என்றும் தனது சுற்றுலாக்களில் தனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பைக் கண்டு மனம் மகிழ்ந்ததாகவும் கூறினார்.

“பெரும்பாலான மக்கள் என்னை அறிந்துள்ளனர். அவர்கள் மிகவும் அன்பு காட்டினார்கள். சீனர்கள் மட்டுமன்றி, மலாய்க்காரர்கள், இந்தியர்கள் அனைவருக்கும் என்னைத் தெரிந்துள்ளது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் அறியப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது,” என்றார் அவர்.

முடிவு அவருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், திரு டான் 2011 தேர்தலைவிடச் சிறப்பாகவே செய்திருந்தார். அந்தத் தேர்தலில் 4.91% வாக்குகளைப் பெற்று $48,000 வைப்புத் தொகையை இழந்தார்.

குறிப்புச் சொற்கள்