தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தர்மனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

2 mins read
be2bed34-b8d2-43f1-a7d5-b075c8548298
திரு தர்மன், மனைவி ஜேன் இட்டோகியுடன் தாமான் ஜூரோங் ஈரச்சந்தை, உணவங்காடியில் இருந்து கிளம்பும்போது கையசைத்து தமது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மன் சண்முகரத்னத்திற்கு அமெரிக்கா, இந்தியா, உக்ரேன் உள்ளிட்ட உலக நாடுகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

66 வயதான திரு தர்மன், சனிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் 70.4 விழுக்காடு வாக்குகளுடன் பெரும் வெற்றி பெற்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டி இடம்பெற்ற அதிபர் தேர்தல் இதுவாகும்.

“அமெரிக்காவும் சிங்கப்பூரும் பரஸ்பர மரியாதை, பண்புகள், பொதுவான நலன்களின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட நீண்டகால, வலுவான உறவைக் கொண்டுள்ளன என்று செப்டம்பர் 1 தேதியிட்ட ஓர் அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மனுடனும் சிங்கப்பூர் மக்களுடனும் அணுக்கமாக பணியாற்ற விழைகிறோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக தமது “வரலாற்றுச் சிறப்புமிக்க பதவிக் காலத்தில்” அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக அதிபர் ஹலிமா யாக்கோப்பிற்கும் திரு மில்லர் நன்றி தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முன்பு டுவிட்டர் எனப்பட்ட ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் திரு தர்மனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த திரு தர்மனுடன் அணுக்கமாகப் பணியாற்றுவதை எதிர்நோக்குவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரு தர்மனுக்குக் கிடைத்த வெற்றி, சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக தமது இன்ஸ்டகிராம் பதிவில் கூறியுள்ளார். திரு தர்மனின் தமிழ் பாரம்பரியமும், ஈர்க்கக்கூடிய தகுதிகளும் தமிழகத்தைப் பெருமையடையச் செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் திரு தர்மனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சிங்கப்பூருக்கான உக்ரைன் தூதர் கேடரினா ஜெலென்கோ,

இருநாடுகளுக்கிடையில் நல்ல ஒத்துழைப்பும் நட்பும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்