அதிபர் தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள், யார் வெற்றி பெறுவார் என்பதை அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்கள் கணிக்கும் அளவுக்கு மாதிரி முடிவு வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
தேர்தலில் போட்டியிட்ட மூவரில் ஒருவரான திரு இங் கொக் சொங் அதைப் பார்த்ததுமே தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
திரு இங்கிற்கு 15.72 விழுக்காடு வாக்குகள்தான் கிடைத்து இருந்தன. பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரு தர்மன் சண்முகரத்னத்தை திரு இங் பாராட்டினார்.
மாதிரி தேர்தல் முடிவு தொலைக்காட்சியில் வெளியானபோது திரு இங் தனது சமூக ஊடக அமைப்பின் அலுவலகத்தில் இருந்தார்.
முடிவுகள் வெளியானதை அடுத்து ஊடகத்திடம் பேசிய திரு இங், ‘‘இறுதி முடிவுக்காக இன்னும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. திரு தர்மனிடம் தோற்றுவிட்டதை இப்போதே நான் ஒப்புக்கொள்கிறேன்,’’ என்று தெரிவித்தார்.
மாதிரி தேர்தல் முடிவு வெளியான உடனேயே திரு தர்மன் தன்னுடன் தொடர்புகொண்டு பேசியதாக திரு இங் தெரிவித்தார்.
‘‘அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை முதன்முதலாக நான் அறிவித்தபோது ஒரு கருத்தை வலியுறுத்தினேன்.
‘‘சிங்கப்பூரர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே எனது முக்கியமான முதல் குறிக்கோள் என்று நான் அப்போது தெரிவித்து இருந்தேன்.
‘‘இதுதான் எனது முழு முதல் நோக்கம். அதை நான் சாதித்து இருக்கிறேன்,’’ என்று திரு இங் தெரிவித்தார்.
‘‘எனக்கு உதவிய நாட்டிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும், என் நாட்டிற்கு நான் உதவ வேண்டும். இது எனது மற்றொரு குறிக்கோள்.
‘‘எனது கடைசி மூச்சு இருக்கும் வரை என் நாட்டிற்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன்,’’ என்று திரு இங் உறுதி கூறினார்.

