தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை மாற்றத்தால் உடல்நல பாதிப்பு: ஆராய புதிய ஆய்வுச் செயல்திட்டம்

2 mins read
1f4caefa-dbb5-4667-b2d8-85a746e7b6e9
உலகம் வெப்பமடைவதால் வெப்பநிலை அதிகரிக்கிறது. அதனால் வெப்ப உளைச்சல் அதிகரிக்கிறது. - படம்: இபிஏ

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள், அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக மனிதர்களின் உடல் நலனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

இதற்கான புதிய ஓர் ஆய்வுச் செயல்திட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும்.

இது பற்றி கருத்து தெரிவித்த இந்தப் பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த மூத்த ஆய்வுப் பேராசிரியரான டாக்டர் கிம்பெர்லி ஃபோர்னெஸ், உலக வெப்பநிலை அதிகரிக்கின்ற ஒரு சூழலில் மனிதனின் உடல் நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் உள்ள சிக்கலான தொடர்புகளைப் பற்றி சுகாதாரப் பராமரிப்புத் துறை பட்டத் தொழிலர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதாகக் கூறினார்.

தொடங்கப்பட உள்ள புதிய செயல்திட்டத்திற்கு அதே பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் யான் பௌச்சருடன் இவரும் தலைமை தாங்குவார்.

வெப்பநிலை அதிகரிப்பதுதான் மனிதகுலம் எதிர்நோக்கும் தனித்த ஒரு பெரிய சுகாதார மிரட்டல் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.

பருவநிலை காரணமாக உலக அளவில் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் வெப்ப உளைச்சல் அதிகமாகிறது. காட்டுத் தீ காரணமாக ஏற்படக்கூடிய காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதய நோய், சுவாச நோய்களும் ஏற்படக்கூடும்.

கடல் மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு அதன் காரணமாக தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் ஆபத்தும் உண்டு.

வெப்பநிலை அதிகரிப்பதால் மனநலம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

பருவநிலை தொடர்பான பேரிடர்கள், அளவுக்கு அதிக ஆபத்தான பருவநிலைகள் காரணமாக மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்படலாம். பொருள் சேவை வழங்கீட்டு ஏற்பாடுகள் பாதிக்கப்படலாம்.

சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள இயலாத நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் ஃபோர்னெஸ் தெரிவித்தார்.

தொடங்கப்பட இருக்கும் ஆய்வுச் செயல்திட்டம் உள்ளூரிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பருவநிலை மாற்றம் காரணமாக மனித உடல் நலனுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை, தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

அதோடு அத்தகைய தாக்கங்களை அது மதிப்பிடும் என்று பேராசிரியர் டியோ யின் யிங் தெரிவித்தார். இவர் அந்தப் பள்ளியின் தலைவர்.

தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருந்தகப் பள்ளி இதர இரண்டு ஆய்வுச் செயல்திட்டங்களைத் தொடங்கும். அவற்றில் ஒன்று வெப்பத்தால் ஏற்படக்கூடிய சுகாதாரத் தாக்கங்களில் கவனம் செலுத்தும். மருத்துவமனைகளின் நிலைப்பாடு பற்றி மற்றொரு திட்டம் ஆராயும்.

இந்தச் செயல்திட்டங்களின் மேல்விவரங்கள், துபாயில் 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடக்க உள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் மாநாடு 23 என்ற மாநாட்டில் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்